எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு அருகே தனியார் வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர், நச்சுவாயு தாக்கி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. லாரி ஓட்டுநர் ஆசிட் தன்மை குறித்து முன்கூட்டியே எச்சரித்து இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என உறவினர்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு அருகே கோண வாய்க்கால் பகுதியில் யுகானந்தவேல் என்பவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக லாரி உட்பட கனரக வாகனங்கள் சுத்தம் செய்யும் வாட்டர் சர்வீஸ் நிலையத்தை நடத்தி வந்தார்.
இவரது உறவின் முறையான அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் யுகானந்தவேலிடம் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கமாக சர்வீஸ் நிலையத்தில் உரிமையாளர் யுகானந்தவேல், பணியாளர்கள் சந்திரன், செல்லப்பன் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அப்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, திருப்பூரில் உள்ள சாய சலவை ஆலைகளுக்கு டேங்கர் லாரியில் அலுமினியம் குளோரைடு என்ற கெமிக்கல் ஆசிட்டை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, ஆசிட்டை இறக்கிவிட்டு சுத்தம் செய்வதற்காக வாட்டர் சர்வீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து லாரியை சுத்தம் செய்வதற்காக பணியாளர் செல்லப்பன் லாரியின் மேல் பகுதியை திறந்து சுத்தம் செய்ய முயன்ற போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட மற்றொரு பணியாளர் சந்திரன் செல்லப்பனை மீட்டு மேலே தூக்கிய நிலையில், சந்திரன் மயக்கமடைந்து டேங்கர் லாரியின் உள்ளே விழுந்துள்ளார்.
இதனை கண்ட செல்லப்பன் கூக்குரல் எழுப்பிய நிலையில், லாரியின் மேல் பகுதிக்கு வந்த வாட்டர் சர்வீஸ் நிலையத்தின் உரிமையாளர் யுகானந்தவேல், சந்திரனை காப்பாற்ற முயன்ற போது ஆசிட் வாயு காரணமாக மூச்சு விட முடியாமல் அவரும் கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு வீரர்கள், மயக்கமடைந்த சந்திரன் மற்றும் யுகானந்தவேல் ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு உறவினர்கள் குவிந்து கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது.
கனரக லாரியை சுத்தம் செய்யும் தொழிலை 30 வருடங்களுக்கு மேலாக செய்து வரும் அனுபவ மிக்கவர்களாக இருக்கும் நிலையில், எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தால் இருவரையும் பறிகொடுக்க நேர்ந்துள்ளது.
ஆசிட் டேங்கர் லாரியை ஓட்டி வந்த ஒட்டுநர் எச்சரிக்கை செய்திருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்பதே உறவினர்களின் குரலாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், நச்சுவாயு தன்மை கொண்ட லாரியை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.