எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு நன்மைகள் நிகழ்ந்து வந்தாலும் மோசடி கும்பல்களால் தீய நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சைபர் கிரைம் கும்பல் ஒன்று ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதால் மணிப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...
சமீபத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் பூதாகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் இறந்தவரின் குரல், புகைப்படம், வீடியோ ஆகியவை நிஜத்தைப் போலவே உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சைபர் கும்பல் அரங்கேற்றும் மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையிலான ஒரு மிரட்டல் சம்பவம் தான் ஒரு இளம்பெண்ணுக்கு அரங்கேறியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக சென்னையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அந்த இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கக்கூடிய சமூக வலைதள குழு ஒன்றில் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைப் பார்த்து அப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட இத்தகைய அவலம் குறித்து தனது வழக்கறிஞர் அருணுடன் சென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த இளம்பெண்ணின் வழக்கறிஞர் அருண், சைபர் கிரைம் கும்பல் ஒன்று ஏ.ஐ மூலமாக இளம்பெண்ணை போல ஆபாச வீடியோக்களை உருவாக்கி இளம்பெண்ணின் டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதள ஐடிக்களுக்கு அனுப்பி வருவதாக தெரிவித்தார். மேலும் அந்த இளம்பெண்ணை ஆண் நண்பருடன் தனிமையில் இருப்பது போல வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் இல்லையேல் அனைவருக்கும் இந்த வீடியோவை பரப்பிவிடுவதாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.
அந்த சைபர் கிரைம் கும்பல் வீடியோ பரப்பும் ஐடிக்களை உடனடியாக டீ ஆக்டிவேட் செய்துவிட்டு வேறொரு ஐடி மூலமாக வந்து மீண்டும் மிரட்டுவதாகவும் தெரிவித்த வழக்கறிஞர், இந்த சைபர் கிரைம் கும்பல் ஏ.ஐ.மூலமாக உருவாக்கிய இளம்பெண்களின் ஆபாச வீடீயோக்களை விற்பனை செய்து அதை பிட் காயின் மூலமாக மட்டுமே பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதேபோல நாடு முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் அச்சம் காரணமாக புகார் கொடுக்க முன் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆன்லைன் வாகன செயலியை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் அந்த செயலியில் கொடுக்கும் எண்களை பயன்படுத்தி, சைபர் கும்பல் இதுபோன்ற விஷம செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறிய வழக்கறிஞர், இளம்பெண்கள் ஆன்லைன் வாகன செயலியை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
மனிதனின் அபார அறிவாலும் திறமையாலும் மனித குலத்திற்கும் அதனைச் சார்ந்த பிற தொழில்களின் வளர்ச்சிக்காகவும் தொழில்நுட்பங்கள் பயன்பட்டாலும் அதே மனித குலத்தின் சில விஷமிகளால் பாதிப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன.