எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ள இருள் சூழ்ந்த தங்களுடைய வாழ்வில் எப்போது ஒளிவீசும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் இருளர் இன மக்கள். அமைச்சர் கே.என். நேருவின் சொந்த கிராமம் அருகே வாழ்ந்துவரும் தங்களுடைய கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருளர் இன மக்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...
திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் அருகே உள்ள பெருவளப்பூர் ஊராட்சி மாரியாகுளம் பகுதியில் இருளர் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தங்களது வாழ்வாதாரத்திற்காக கரிமூட்டம் போடும் தொழிலை இவர்கள் செய்து வருகின்றனர். 20 வருடத்திற்கும் மேலாக பனை ஓலை குடிசையில் வசித்துவரும் இம்மக்கள், குடிநீர், மின்சாரம், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பட்டாவுடன் கூடிய வீடு, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகள் இவர்களுக்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது.
பெருவளப்பூர் - நம்புக்குறிச்சிக்கு இடையே செல்லும் சாலையோரத்தில் வசித்துவரும் இவர்கள், அரசிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லாததால் வேறுவழியின்றி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் செல்போன் லைட் மற்றும் பேட்டரி லைட் வெளிச்சத்தில் குருவி கூடு போல் இருக்கும் வீடுகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே இருளர் இன மக்கள் படும் துயரத்தோடு, தற்போது பெய்துவரும் கனமழையும் சேர்ந்து கொள்ள, அவர்கள் குடியிருக்கும் பகுதி முற்றிலும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கை குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தாய்மார்கள், வருங்காலத்தை நினைத்து மனவேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
விளம்பர திமுக அரசிடம் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் அவர்கள், குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க 2 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறும் அவர்கள், பிள்ளைகள் படிக்க முடிவதில்லை, பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப முடியவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். ரேஷன் கார்டு இல்லாததால், அதிக விலைக்கு கடையில் அரிசி வாங்கி பிழைப்பு நடத்தி வருவதாக கூறுகின்றனர் இருளர் இன மக்கள்.
அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த கிராமத்தின் அருகில் வசிக்கும் தங்களுடைய கோரிக்கைகள் செவிசாய்க்கப்படுமா என்பதே இருளர் இன மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான வசதிகளை விளம்பர அரசு செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.