எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டப் பகலில் மளிகைகடை உரிமையாளரை மின்வாரிய ஊழியர் மது போதையில் அரிவாள் கொண்டு மிரட்டும் வீடியோ வெளியான நிலையில், ஓசியில் மளிகை பொருட்கள் கேட்டு மிரட்டல் விடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
அரிவாளை கொண்டு கடை உரிமையாரை மதுபோதையில் மின்வாரிய ஊழியர் ஆபாசமாக வசைபாடுவதோடு.... வெட்டி சாய்த்து விடுவேன்.. என பகிரங்க மிரட்டல் விடும் காட்சிகள் தான் இவை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். மளிகை கடை நடத்திவரும் இவர், வழக்கம்போல் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினார். குமாரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அன்பு செல்வன், தினம்தோறும் மது போதையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை மிரட்டி ஓசியில் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று உச்சக்கட்ட மதுபோதையில் மளிகை கடைக்கு வந்த மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வன் பொருட்களை ஓசியில் கேட்டதாக தெரிகிறது. ஆனால், கடை உரிமையாளர் குமார் ஓசியில் பொருட்களை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வன் அரிவாளுடன் வந்து கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு ஆபாச வார்த்தைகளில் வசைபாடி பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மளிகை கடை உரிமையாளர் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளரை மது போதையில் மின்வாரிய ஊழியர் அரிவாளுடன் சென்று மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... இது போன்ற அநாகரீக செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.