கஞ்சா விற்ற திமுக பெண் கவுன்சிலர் மகன்... தமிழகத்தில் மூளை முடுக்கெங்கும் கஞ்சா விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக மாநகராட்சி பெண் கவுன்சிலரின் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் புழக்கத்தில் திமுகவினரின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

தூத்துக்குடி மாநகரில் இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி மட்டகடை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அவரிடம் 350 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி மாநகராட்சி 26-வது வார்டு திமுக கவுன்சிலர் மரிய கீதாவின் மகன் ஜெர்சன் என்பதும், முள்ளக்காடைச் சேர்ந்த ஹரி பிரபாகர், தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சத்தியசீலன் என்ற மொட்டை சத்தி, கேவிகே நகர் கார்த்திக் ஆகியோரிடம் இருந்து அவர் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் பிடித்த தனிப்படை போலீசார் அவர்களை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அங்கே வந்த கவுன்சிலர் மரியகீதா, தனிப்படை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களது வாகனத்தை உடைத்து, மகனை இந்த வழக்கிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் நான்கு பேர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனிடையே தலைநகர் சென்னையில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த அப்பள நாயுடு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் இருந்து இந்த கஞ்சா கொண்டு வரப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விளம்பர ஆட்சியில் தொடர்ந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது, மாநிலத்தில் போதைப் பொருள் வரத்து, தங்கு தடையில்லாமல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.      
 

Night
Day