எழுத்தின் அளவு: அ+ அ- அ
கும்பமேளா புகழ் மோனாலிசா கதறி கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அழுகையின் பின்னணி என்ன விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..!
உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றுக் கொண்டிருந்த சாதாரண பெண்ணான மோனாலிசாவின் கவர்ச்சியான கண்கள் அவரை ஒரே நாளில் இந்திய அளவில் டிரெண்டாக்கியது. இளம் பெண் மோனாலிசாவின் கண்கள் வசீகரிக்கும் தன்மை கொண்டிருந்ததால் கும்பமேளாவிற்கு வந்தவர்களில் கணிசமானோர் இவரைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். பலர் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், மோனாலிசா பிரபலமடைந்தார்.
அவரைப் பார்க்கவே சிலர் கும்பமேளாவுக்கு கிளம்பிச் செல்லும் அளவுக்கு பிரபலம் ஆனார். மோனாலிசாவுடன் செல்பி எடுக்க பலரும் போட்டிப் போட்டனர். மோனாலிசாவின் தோற்றத்திற்கு மக்கள் மத்தியில் இந்த அளவுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும் என அவரது குடும்பத்தினரே நினைக்கவில்லை. இப்படியான நிலையில் தான் மோனாலிசாவை சினிமாவில் நடிக்க வைக்க முன் வந்தார் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா.
இந்திய அளவில் மோனலிசா ட்ரெண்ட் ஆக, அவரைத் தனது படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என அவரது வீட்டிற்கே சென்று அவரது குடும்பத்தினரிடம் பேசினார் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா. ருத்ராட்ச மாலைகள் விற்றுக் கொண்டிருந்தவருக்கு சினிமா வாய்ப்பு என்பது அதிர்ஷ்டத்தின் உச்சமாகவே இருந்தது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்துமே அடுத்தடுத்து டிரெண்ட்டாக மோனலிசா நடிக்க இருந்த படத்துக்கு ஒரு பைசா செலவு இல்லாமல் புரோமோஷன் கிடைத்தது.
இப்படியான நிலையில் தான் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிரபல நகைக்கடையின் கிளையை திறந்து வைக்க வந்தார் மோனாலிசா. அவரை பார்க்க திரண்ட கூட்டத்தை பார்த்து டாப் HEROIN-களுக்கே சற்று புகைச்சலை ஏற்படுத்தியது. அதிலும் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் மோனாலிசாவுக்கு வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசாக கொடுத்தது ஹைலைட்டாக இருந்தது.
இப்படி புகழின் உச்சிக்கே சென்ற மோனாலிசாவை கதற கதற அழ வைத்துள்ளது பாலியல் குற்றச்சாட்டில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா-வின் கைது சம்பவம்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த மற்றொரு பெண் ஒருவரை தொடர்பு கொண்ட இயக்குநர் மிஸ்ரா, அவருக்கு சினிமா ஆசை காட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
மும்பையை சேர்ந்த அந்த பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், பின் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து கடந்த 4 ஆண்டுகளாக தனது காம இச்சைக்கு அப்பெண்ணை இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பல முறை இரையாக்கி வந்ததாகவும், இதில் 3 முறை அப்பெண்ணுக்கு கட்டாய கருகலைப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தேவைக்கு மட்டும் தன்னை பயன்படுத்தி வந்த இயக்குநர் சனோஜ் மிஸ்ராவிடம் பட வாய்ப்பு கேட்டு அந்த பெண் அழுத்தம் கொடுக்கவே, உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என நம்ப வைத்து சனோஜ் மிஸ்ரா ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் கும்பமேளா மோனாலிசாவை நடிகை ஆக்குகிறேன் என அவருடன் சுற்றிக் கொண்டு இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் அளித்த புகாரில் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளது உத்தரபிரதேச காவல்துறை.
சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதால், ஏமாற்றத்துடன் கதறி கதறி அழுத மோனாலிசா-வை அவரது கும்பத்தினர் தேற்றி சமாதானப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. 10 படங்களை இயக்கியிருந்தாலும் வெளி உலகுக்கு பெரிதும் அறிமுகம் இல்லாத இயக்குநராக இருந்த சனோஜ் மிஸ்ரா LIMELITE வெளிச்சத்துக்கு வர காரணமே மோனாலிசாவுக்கு படவாய்ப்பு கொடுத்தது தான்.
நகைக்கடை திறப்பு விழாவிலேயே மோனாலிசாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பையும் மவுசையும் நன்கு உணர்ந்த சனோஜ் மிஸ்ரா, தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் மோனாலிசாவை கூடவே அழைத்துச் சென்று விளம்பரம் தேடி வந்துள்ளார். இந்தநிலையில் மோனாலிசாவுக்கும் பட வாய்ப்பு என்ற பேரில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.