காகிதமாக மாறும் ஆகாயத் தாமரைகள்... இளம் ஆராய்ச்சியாளரின் கண்டுபிடிப்பு...

எழுத்தின் அளவு: அ+ அ-

நீர் நிலைகளுக்குப் பெரும் பிரச்னையாக இருந்துவரும் ஆகாயத் தாமரைகளை அகற்றவும் அதை வருமானம் ஈட்டும் வகையில் மாற்றவும் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் திருச்சியை சேர்ந்த இளம் பெண் ஆராய்ச்சியாளர்.  ஆகாயத் தாமரைகள் மூலம் வீட்டிலேயே காகிதம் தயாரிப்பதுதான் அவருடைய கண்டுபிடிப்பு. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழக நீர் நிலைகளில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகளால் தண்ணீர் மாசு அடைவதுடன், மீன்கள் போன்ற உயிரினங்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்காது.  இதனால், ஆகாயத்தாமரை படர்ந்த நீர்நிலையில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது.

பலகோடி செலவிட்டும் இது அழிக்க முடியாத ஒரு தாவரமாக இருந்து வருகிறது. இதன் பாதிப்புகளில் இருந்து  நீர்நிலைகள், உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, திருச்சியைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற இளம் ஆராய்ச்சியாளர் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

ஆகாயத் தாமரைகளை மறுசுழற்சி மூலம் பயனுள்ளதாக மாற்றம் செய்வது தொடர்பான அவருடைய ஆராய்ச்சி நல்ல பலனை அளிக்கவே, அதை, திருச்சியில் உள்ள பிரபல தேசியக் கல்லூரியுடன் இணைந்து செயல்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

ஏரி, குளங்கள், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை பறித்து அதன் தண்டுகள் மற்றும் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கி, அச்சில் வார்த்து, வெயிலில் காயவைத்து காகிதமாக மாற்றுவதே அவருடைய முயற்சி. 

இதுபோன்ற முறையினால் தொழில் முனைவோர்கள் பெருக வாய்ப்பு உண்டு. மேலும் வீடுகளிலேயே இதனைசெய்து கைத்தொழிலாகவும் சிறுகுறு தொழில் முனைவோர்களாகவும் தங்களை வளப்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. 

காகித தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் இதனை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தும்போது நிச்சயம் மாசு இல்லாத தமிழகம் உருவாக்க முடியும். தமிழக அரசு இதுபோன்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்து அதன்வாயிலாக ஆகாயத் தாமரைகளுக்கு ஒரு முடிவு கட்ட முன்வர வேண்டும். 

ஆகாயத்தாமரைகளை பறித்து காயவைத்து விற்பனை செய்தாலே  ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விலைபோவதாக கூறுகின்றனர் தாவரவியல் துறை நிபுணர்கள். வழக்கமாக மரத்திலிருந்து காகிதகூழ் தயாரிக்க 60 சதவீதம் வரை ரசாயனம் சேர்க்கவேண்டியுள்ளது. ஆனால் ஆகாயத்தாமரையில் இருந்து  தயாரிக்க அது தேவையில்லை என்பதால் நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

இது போன்ற நல்ல முயற்சிகளையும் திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதன் வாயிலாக நீர் நிலைகளை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும், இதனை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்தினால் வீட்டுக்கு வீடு இனி ஆகாயத்தாமரை மூலம் காகிதம் தயாரிப்பது குடிசைத் தொழிலாக மாறும். அதன்மூலம் மாசில்லா சுற்றுச்சூழல்  மாநிலமாக தமிழகம் மாறும் என்பது நிச்சயம்.

Night
Day