எழுத்தின் அளவு: அ+ அ- அ
2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தான் தமிழக அரசியல் களத்தின் லேடஸ்ட் பரபரப்பாக மாறியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் திமுக கூட்டணியை சில்லு சில்லாய் சிதைக்கப்போகும் கண்ணி வெடி என்றே கூறப்படும் நிலையில் என்ன சொல்கிறது அரசியல் களம் விரிவாக பார்க்கலாம்..
ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு என சில நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் திமுக மேலிடமே கலகலத்து போனது அனைவரும் அறிந்த ஒன்று... இந்தநிலையில் தான் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை துணை முதல்வரே என குறிப்பிட்டு அக்கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் திமுகவுக்கு ஷாக்-கை கொடுத்திருக்கிறது.
செல்வபெருந்தகையின் பிறந்தநாளை யொட்டி சென்னையின் பல்வேறு இடங்களிலும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தலைப்பிட்டு 2026ன் துணை முதல்வரே என துதி பாடி பக்கத்தில் ஆச்சரியக்குறியும் போட்டு சென்னையின் சுவர்கள் தாங்கி நிற்கும் போஸ்டர்களால் திமுக கூடாரமே கடும் அனலால் தகித்துக்கொண்டிருக்கிறது.
என்னதான் சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப்-புக்கு விளக்கம் கேட்டு செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியதாக அறிக்கை வெளியிட்டிருந்தாலும் செல்வபெருந்தகையின் இசைவு இல்லாமல் இப்படியொரு காரியத்தை மாநில செயலாளர் பதிவி வகிக்கும் ஒருவர் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
துணை முதல்வர் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து செல்வபெருந்தகையின் அறிக்கையில் முழுக்க முழுக்க திமுக-வை சமாதானப்படும் வாசகங்களே நிரம்பி இருந்தாலும் 2026 தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ் சார்பிலான போஸ்டர் முக்கியத்துவம் வய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல்களை தனித்து சந்திக்கும் திராணியற்ற திமுகவுக்கு கூட்டணி ஒன்றே பக்கபலமாக உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக பல இடங்களில் பெபாசிட் கூட வாங்காது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதுவும் தற்போதைய சூழலில் 2026 சட்டப்பேரவை தேர்தலை திமுக தனித்து சந்தித்தால் புல்லுக்கு கூட தாங்காது என்பது தான் அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது. சீர்கெட்டுக்கிடக்கும் சட்டம் ஒழுங்கு, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் பாலியல் குற்றங்கள், எங்கு திரும்பினாலும் ரத்த வாடை வீசும் அளவுக்கான கொலைகள், நிர்வாக சீர்கேடு, விவசாயிகளின் கண்ணீர் என திமுக ஆட்சியில் மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியின் பலம் ஒன்றையே பெரிதும் நம்பியிருக்கிறது திமுக. இதனால் கூட்டணிக்குள் எந்தவித விரிசலும் விழுந்து விட கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தியும் வருகிறது.
இதற்கு ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு என விசிகவில் இருந்து கிளம்பிய பூதத்தை திமுக கையாண்ட விதமே சாட்சி. இந்த நிலையில் தான் விசிக-வை தொடர்ந்து தற்போது ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் காங்கிரஸ் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டிருக்கிறது.
2016 சட்டப்பேரவை தேர்தலின் போது 3-வது அணியாக உருவெடுத்த மக்கள் நல கூட்டணியால் திமுக அந்த தேர்தலில் மரண அடி வாங்கியதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்தநிலையில் தற்போது ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு என்ற ஒரே முழக்கத்தை திமுக கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து எழுப்பி வருவது ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு என்ற ஒற்றை புள்ளியில் 3-வது அணி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆரூடம் பகர்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அப்படி 3-வது அணி உருவாகும் பட்சத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழப்பது நிய்யம் என்றே அடித்து கூறப்படுகிறது.