எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு சொகுசு காரில் வந்த திமுகவினர் துரத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, காரில் வந்து அச்சுறுத்தியவர்களை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் காரில் வந்த பெண்கள் திமுகவினரால் துரத்தப்பட்டதன் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து நாளுக்கு நாள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அதற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான திமுக பிரமுகர் ஞானசேகரனே உதாரணம். திமுகவினரின் அட்டூழியத்தால் வெளியே செல்லவே பெண்கள் அச்சப்படும் நிலை தான் தற்போது தமிழகத்தில் இருந்து வருகிறது.
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக விளம்பர அரசின் முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை அப்பட்டமான பொய்களை கூறி வருகிறார். இந்நிலையில் திமுகவினரால் பெண்கள் சிலர் அச்சுறுத்தலுக்கு ஆளான சம்பவம் அரங்கேறி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்.
கானாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னை நோக்கி 3 பெண்கள் ஒரு ஆண் உள்ளிட்டோர் கடந்த 25-ம் தேதி காரில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண்கள் பயணித்த காரை திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் சினிமா பட பாணியில் அதிவேகமாக துரத்தி சென்றதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திமுகவினர் துரத்தி வந்த போது, அதனை வீடியோவாக பெண்கள் பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்டத்தில் காரை ஒரு இடத்தில் வழிமறித்தபோது, பெண்கள் வந்த கார் மூன்று முறை முன்னும் பின்னுமாக சென்றதும், ஒரு இளைஞர் ஓடி வருவதும் பின் மற்றொரு காரில் வரும் இளைஞர்கள் சாலையின் குறுக்காக நிறுத்தி பெண்கள் வந்த காரை தடுக்கும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்களில் 32 வயதுடைய ஒருவர், கடந்த 26ஆம் தேதி காலை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட பெண், மன வேதனையுடன் வீடு திரும்பினார்.
இதனிடையே, பெண்களை காரில் துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போதுக்கூட நடவடிக்கை எடுக்காத கானாத்தூர் போலீசார், திமுக பிரமுகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சமாதான பேச்சை ஏற்காத பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த விவகாரத்தில் பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக இருந்ததால் போலீசார் வேறுவழியின்றி வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இந்த வீடியோ காட்சிகளை கண்ட பலரும், தமிழகத்தில் பெண் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆளும் கட்சியினர் என்பதால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண் TN06BR9988 மற்றும் TN72E6004 என தெரிந்தபின்னரும், அட்டூழியத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் பிடிக்க வில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த சம்பவமே மேலும் ஒரு எடுத்துக்காட்டு.