குடிசை மாற்று வீடுகளை ஒதுக்குவதில் முறைகேடு... வன்னியம்பதி மக்களுக்கு நீதி கிடைக்குமா!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூரில் வன்னியம்பதி பகுதி மக்களுக்காக கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை ஒதுக்க திமுகவினரும் அரசு அதிகாரிகளும் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிசை வாழ் மக்களுக்கு குடியிருப்பு கட்டி தருவதாக கூறி பயனாளிகளுக்கு வீடு கொடுக்காமல் ஏமாற்றி வரும் விளம்பர அரசின் மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 126 வார்டுக்குட்பட்ட வன்னியம்பதி குப்பைமேடு பகுதியில் கடந்த மூன்று தலைமுறையாக சுமார் 340 குடும்பங்கள் குடிசைவாழ் மக்களாக வசித்து வந்தனர். அவர்களுக்காக கடந்த அஇஅதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் மூலம் குடிசைகளை அகற்றி குடிசை வாழ் மக்களுக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. நான்கு மாடி கட்டிடமாக ஒரு வீடு 450 சதுர அடி என்ற அளவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின்படி பணிகள் நடைபெற்று வந்தன.

முதலில் அங்கு தலைமுறையாக வாழ்ந்த நபர்களுக்கு மட்டும் வீடு என்று இருந்த நிலையில் நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களும் எங்களுக்கும் வீடு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நான்கு மாடிகள் கொண்ட கட்டிடம் 8 மாடிகள் கொண்ட கட்டிடமாகவும், 340 குடும்பங்களுடன் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சேர்த்து 504 வீடுகளை கொண்டும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விளம்பர திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இதனையடுத்து குடிசைவாழ் மக்கள் அரசுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான டி.டி. கொடுத்து குடியேறும் வேளையில், அரசு அதிகாரிகள் மற்றும் அப்பகுதிகுட்பட்ட திமுக பிரமுகர்கள் அப்பாவி மக்களிடம் கைவரிசை காட்டினர்.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வன்னியம்பதி குப்பைமேடு மக்களிடம் தொகையை பெற்று கொண்ட திமுகவினரும் அரசு அதிகாரிகளும் கோபாலபுரத்தை சேர்ந்த மக்களை புது அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற்றும் பணியை தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த வன்னியம்பதி குப்பைமேடு வாசிகள், இது எந்த விதத்தில் நியாயம் என குமுறி வருகின்றனர். 

அடுக்குமாடி குடியிருப்பில் 7 மற்றும் 8வது தளம் காலியாக உள்ள நிலையில் தங்களுக்கு வீடு தராமல் தட்டி கழிப்பதாக ஆவேசத்துடன் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், தாங்கள் சாலையிலும் வாடகை வீட்டிலும் வசித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி தற்போது குடியேறினாலும் தளத்திற்கேற்ப தனித்தொகை வசூலிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். 

மக்களுக்காக ஒதுக்கபட்ட வீடுகளையே போராடி வாங்கும் அவலநிலைக்கு இந்த விளம்பர ஆட்சியில் வன்னியம்பகுதி குப்பைமேடு குடிசைப் பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் விரோத விளம்பர திமுக ஆட்சியில் அலைக்கழிக்கப்படும் இந்த அப்பாவி மக்களுக்கு இனியாவது விடியல் கிடைக்குமா? என்று இனி பொறுத்திருந்து பார்ப்போம்... 

ஜெயா பிளஸ் செய்திக்காக ஒளிப்பதிவாளர் வி. பத்மநாபன் உடன் செய்தியாளர் ஜெயராணி வில்சன் 

varient
Night
Day