எழுத்தின் அளவு: அ+ அ- அ
தங்கத்தின் விலையானது கடந்த காலங்களில் வேகமாக உயர்ந்து உச்சம் தொட்ட நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக சரிவினை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை 38 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2025-ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்த தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீர் சரிவினை சந்தித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியையும் தங்கத்தை வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 68,000 ரூபாய் இருந்தா ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை உயரும் என பலர் கணித்து வந்த நிலையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு பல்வேறு கேள்விகளையும் வியப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற மார்னிங் ஸ்டார் இதழின் பொருளாதார நிபுணர் ஜான்வில்ஸ் அடுத்த சில ஆண்டுகளில் ஆபரண தங்கத்தின் விலை 38 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக கணித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் பொருளாதார நிபுணரின் கணிப்பு குறித்துப் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கோபாலகிருஷ்ணன், கடந்த காலங்களில் உலகப் பொருளாதார நிலை நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம் பெரு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடுகளை செய்வதை தவிர்த்து விட்டு தங்கம் போன்ற நிலையானவற்றின் மீது முதலீடு செய்ததால் தங்கத்தின் விலை உயர்ந்ததாக தெரிவித்தார்.இந்நிலையில் தற்போதைய சூழலில் எதன் அடிப்படையில் தங்கத்தின் விலையானது 38 சதவீதம் குறையும் என்று கணித்திருக்கிறார் என்று என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதேவேளையில் தங்கத்தின் மீதான இந்த விலை குறைவு என்பது இடைக்கால குறைவாகவே பார்க்கப்படுவதாகவும் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியாக இருந்தாலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார கொள்கைகள் மிக முக்கிய பங்காற்றியுள்ள நிலையில் அவர் ஆளக்கூடிய அமெரிக்காவிலிருந்து பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானதாகவும் நாடகத் தன்மை இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேலையில் தங்கத்தின் விலையானது இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிச்சயம் 38 சதவிகிதம் அதிரடியாக குறைவதற்கு வாய்ப்பில்லை என்பதே பொருளாதார நிலவரம் மூலம் தெரியவருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.