குழுவின் ரூ.10 லட்சத்தை பிரிப்பதில் தகராறு... மகளிர் குழுவின் தலைவி வீடு சூறை...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருக்கோவிலூர் அருகே மகளிர் சுய உதவி குழு பணத்தை பிரிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மகளிர் சுயஉதவிக்குழுவின் தலைவி வீட்டுக்குள் நுழைந்து, பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த செய்தி தொகுப்பை காண்போம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பெரியானூர் கிராமத்தில் ஜெயஸ்ரீ எனும் மகளிர் சுயஉதவிக்குழு செயல்பட்டு வருகிறது. ஜெயந்தி என்பவர் தலைவியாக இருக்கும் இந்த குழுவில் 20 பேர் இருக்கின்றனர். கடந்த மாதம் குழுவின் மூலமாக வங்கியில் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், அந்தப் பணத்தை குழுவில் உள்ள அனைவருக்கும் பிரித்து கொடுக்காமல் தலைவி மற்றும் துணைத்தலைவி மட்டும் பிரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் இரு தரப்பினராக பிரிந்து, தனித்தனியாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இதையடுத்து தலைவி ஜெயந்தியை அழைத்து விசாரித்தபோது, 10 லட்சம் ரூபாய் கடன் தொகையில் 7 லட்சம் மட்டும் முதலில் கொடுத்ததாகவும், மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை கொடுத்த உடன் குழுவில் உள்ள 20 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பிரித்து கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் இந்த பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மீதமுள்ள பணம் வர தாமதம் ஆனதால், 7 லட்சம் ரூபாயை திரும்பி வங்கியில் கட்டிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதை ஏற்காத ஒரு தரப்பினர், நள்ளிரவில் மகளிர் சுயஉதவிக்குழுவின் தலைவி ஜெயந்தியின் வீடு புகுந்து, வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். பண விவகாரம் கைமீறி சென்றதால், இருதரப்பினரையும் திருக்கோவிலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்திருக்கின்றனர். இதையடுத்து காவல் நிலையத்தில் திரண்ட இருதரப்பினரும், போலீசார் முன்னிலையிலேயே மாறி மாறி அடித்துக் கொண்டுள்ளனர். 

அடிதடியில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வாத்திருக்கின்றனர். இருதரப்பு புகார் மனுக்களையும் வாங்கி, போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவில் பணம் பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குழுவின் தலைவியின் வீட்டை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day