எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆசிரியர் உதவியுடன் அரசு பள்ளி மாணவர்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்காப் பொருட்களை பயன்படுத்தி வண்ண வண்ண கைவினைப் பொருட்களை தயார் செய்து அசத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின் புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் கடந்த 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு உயர்நிலை பள்ளி, 1978-ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளி மாணவர்கள் ஒழுக்கமான முறையில் இருப்பதற்காகவும் செல்போன் பார்ப்பதை தடுப்பதற்காகவும், மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள் பல்வேறு கற்றல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தையல் ஆசிரியை மாரியம்மாள், ஓவிய ஆசிரியை பானுமதி ஆகியோர் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மக்காப் பொருட்களைக் கொண்டு, பல்வேறு வண்ண வண்ண கைவினை பொருட்களை செய்ய கற்று கொடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியாக காணப்படுவதாக தெரிவிக்கிறார் தையல் ஆசிரியர் மாரியம்மாள்.
கைவினை பொருட்களை கற்று கொள்ளும் மாணவர்கள் குளிர்பானங்கள், இளநீர் போன்றவற்றை அருந்த பயன்படும் மக்காத பொருளான ஸ்ட்ராவை பயன்படுத்தி, வண்ண வண்ண ரிப்பன்களை கொண்டு பொக்கே தயாரிக்கின்றனர். அதே போல் பிளாஸ்டிக் வயர்களை கொண்டு பூஜை கூடைகள், டியூப் குடைகள், பஞ்சு மூலம் பொம்மைகள், பானை ஓவியங்கள், துணிகளில் எம்ராய்டிங், காலண்டர் அட்டைகளில் கிளாஸ் பெயிண்டிங், தலைவர்களின் வண்ண படங்கள் வரைதல் என ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு செய்தும், வரைந்தும் அசத்துகின்றனர்.
கல்வியோடு சேர்த்து கலை பொருட்கள், ஒயர் கூடைகள், ஓவியங்கள், பிளாஸ்டிக் மலர்கள் தயார் செய்வதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பொழுது ஒரு சுய தொழில் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
பொதுவாக இதுபோன்ற கலை பொருட்கள் செய்வதில் மாணவிகளே அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால் இங்கு படிக்கும் மாணவர்கள், கைவினை பொருட்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இந்த படைப்புகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.