கோவில் இடத்தில் குவியும் குப்பைகள்... "கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எங்கே.!"

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியில் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட திருக்கோகர்ணம் 19வது வார்டு பகுதியிலுள்ள மாவட்ட திருக்கோவில்களைச் சார்ந்த பிரகதாம்பாள் பெரிய கோவில் தேர் நிறுத்துமிடம் உள்ளது. அந்த இடம் தற்போது பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொட்டி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

42 வார்டுகளில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு சமையல் செய்து அனுப்பும் சமையலறை சுற்று சுவர் அருகில் தான் இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. கழிவுகளால் துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் தாங்கள் பெரும் அவதிக்கு ஆளாவதாக கூறுகின்றனர்.

தொற்றுநோய் பரவும் அபாயத்தை தடுக்கக் கோரி, அப்பகுதியில் வசிப்பவர்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உறுப்பினர் ஆகியோரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதற்கு இடம் இருந்தும் அப்பகுதியில் கொட்டப்படாமல் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் கழிவுகளை கொட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

கோவிலுக்கு சொந்தமான தேர் நிறுத்துமிடம், பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் முட்புதர் மண்டி கிடப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். 

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கழிவுகள் கொட்டப்படும் நிகழ்வை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் நிர்வாகம் தடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Night
Day