எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமநாதபுரத்தில் சாலையோர மீன்கடைகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி நகராட்சி நிர்வாகம் திடீரென அகற்றியதால் அதிர்ச்சி அடைந்த சிறு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நீடித்த போராட்டத்தில் அடுத்தடுத்து பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் சின்ன கடை பகுதியில் சிலர் சாலையோரத்தில் காய்கறி மற்றும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வியாழக் கிழமை காலை அங்கு வந்த நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் சாலையோர மீன் கடைகளை அகற்றி நகராட்சி வாகனங்களில் அள்ளிப் போட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளும் அந்த பகுதி மக்களும் நகராட்சி வாகனங்களை சிறைபிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை நகராட்சி நிர்வாகம் அழிப்பதாக வேதனை தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் கடுமையான வெயில் காரணமாக அடுத்தடுத்து சிலர் மயங்கி விழுந்தனர். சாலையோரம் கடை வைத்து பிழைக்கக் கூட வழியில்லையா என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், தங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடாதீர்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தவாறே வியாபாரிகள் ஆம்புலன்ஸில் ஏறினர்.
இந்தநிலையில் சிறு வியாபாரிகளின் போராட்டம் 3 மணி நேரமாக நீடித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடை வைத்து நடத்திக் கொள்ள அவர் அனுமதி அளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மைதான். அதேநேரத்தில், ராமநாதபுரம் நகர் முழுவதும் பாதாள சாக்கடை உடைந்து கழிவு நீர் வெளியேறி, கடுமையான சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. சாலைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. அதனையெல்லாம் சரிப்படுத்த நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம், சாலையோரக் கடைகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எந்த வகை நியாயம் எனக் கேட்கின்றனர் ராமநாதபுரம் பொது மக்கள்....