சிதிலமடைந்த கட்டடம்... அம்மா உணவகத்தின் அவல நிலை

எழுத்தின் அளவு: அ+ அ-

காரை பெயர்ந்து காணப்படும் கட்டடம், பழுதான கிரைண்டர், துள்ளி விளையாடும் எலிகள் இதுதான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை. ஏழைகள் பசியாற மாண்புமிகு அம்மாவால் திறக்கப்பட்ட அம்மா உணவகம் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள், அவர்களுக்கு துணையாக வருபவர்கள் என நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களே இந்த அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிக குறைவான விலையில், சிறந்த சுவையான தரமான உணவு கிடைக்கும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களால் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் துவங்கப்பட்டது.

காலை உணவாக இட்லி, பொங்கல், சட்டினி, சாம்பார் பிற்பகலில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. விளம்பர திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல், அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. இதன் காரணமாக அம்மா உணவகங்களில் பல சீரழிந்து வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகமும் பாழடைந்து வருகிறது. அம்மா உணவக கட்டடத்தில் மேற்கூரைகள், சுவர்கள் என அனைத்து பகுதிகளிலும் காரை பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. துருப்பிடித்த கான்கிரீட் கம்பிகள் உள்ளே நுழையும் போதே அச்சுறுத்துகிறது.

கட்டடம் தான் பழுதாகி கிடக்கிறது, உணவாவது தரமாக கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. காலை உணவாக இட்லி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாவு அரைக்கும் கிரைண்டர் பழுதாகி உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் அதனை சரி செய்து தராததால் வெண்பொங்கல் மட்டுமே வழங்குவதாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவகத்தின் உட்புறம் இப்படி இருக்க வெளியே வந்து பார்த்தால் அதை விட நிலைமை மோசமாக உள்ளது. கட்டடத்தை சுற்றி தேங்கிய கழிவு நீரின் துர்நாற்றம், சமையல் அறை வரை வீசுகிறது.

மக்களுக்காக துவங்கப்பட்ட அம்மா உணவகம், மக்கள் சாப்பிடுவதற்கு உதகந்ததாக இல்லை என்றாலும், அங்கு குடியிருக்கும் எலிகளின் விளையாட்டு அரங்கமாகவே தோற்றமளிக்கிறது. குறுக்கும் நெடுக்குமாக ஓடும் எலிகள், உணவகத்தின் உள்ளேயே வலைகளை தோண்டி அங்கேயே வசிப்பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆட்களை கண்டால் பூட்டிய அறையின் கதவு இடுக்கில் எலிகள் ஓடி ஒளிகின்றன. அந்த அறையில்தான் உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் கூறுவது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள விளம்பர திமுக அரசு டாஸ்மாக் கடைக்கு காட்டும் அக்கறையில் சிறிதளவேனும் அம்மா உணவகத்திற்கு காட்டியிருந்தால் ஏழையெளிய மக்களின் பசியை போக்கி இருக்கலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கவனிக்காமல் விட்டுவிட்டதால், இதனை நம்பி உள்ளவர்களின் நிலைமை மோசமாக உள்ளது.

ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட அம்மா உணவகம் மீண்டும் சிறப்பாக செயல்படவும், சுவையான உணவுகளை சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கிடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day