எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சிந்து நீர் ஒப்பந்தம் பற்றிய முழு தகவல்கள் என்ன? இதனால் என்னென்ன பாதிப்புகள் பாகிஸ்தானுக்கு ஏற்படும்? விரிவாக பார்க்கலாம்..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என்ற வலுவாக சந்தேகத்தின் அடிப்படையில் சிந்து நதி ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகள் இந்தியா வழியாக செல்கிறது. பாகிஸ்தானின் 21 கோடிக்கு மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்திருப்பதால், பாகிஸ்தான் மக்கள் தண்ணீருக்கு தத்தளிக்கும் நிலை ஏற்படும். பாகிஸ்தான் நினைத்தே பார்க்க முடியாத இடத்தில் இந்தியா கைவித்திருப்பது உலக அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் நதிகளின் நீரை பகிர்ந்து பயன்படுத்தி கொள்வதற்கான ஒப்பந்தம் தான் சிந்து நீர் ஒப்பந்தம். கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம் சட்டென கையெழுத்தாகி விடவில்லை. ஒன்பது ஆண்டுகள் பேச்சுவார்த்தை, உலக வங்கி மத்தியஸ்தம் போன்றவற்றிற்கு பின்பே கையெழுத்தானது. இதில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மற்றும் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் ஆயூப் கானும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவின் வழியாக சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், சட்லஜ், ராவி, பீஸ் ஆகியவைப் பிரிந்து பாகிஸ்தானுக்குச் சென்று அதே சிந்து நதியில் மீண்டும் கலக்கிறது. இந்தநிலையில் சிந்து நதி நீரில் 80 சதவிகிதத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் 20 சதவிகிதம் இந்தியாவுக்கு என்றும் ஒப்பந்தத்தில் முடிவுகள் எட்டப்பட்டன. இந்தியாவுக்கு இதில் 20 சதவிகித உரிமை இருந்தாலும் இன்று வரை அதன் மீதான தனது உரிமையை மத்தியில் இருந்த எந்த அரசும் கேட்டுப்பெற்றது இல்லை. பாகிஸ்தான் மட்டுமே பெரும் அளவிலான நீரை உபயோகப்படுத்திக்கொண்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியாக ஓடும் நதிகளின் நீரை 1948-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல முடியாதபடி தடுத்துவிட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது. அது சம்பந்தமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தான் சிந்து நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்த தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாகிஸ்தானை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். விவசாயம் தொடங்கி குடிநீர் வரை பாகிஸ்தானின் நீர் சம்பந்தமான அனைத்தும் பயங்கரமாக பாதிக்கப்படும். பாகிஸ்தானில் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைப்பாடு, விவசாய நிலங்களில் உப்புத்தன்மை, நீர் பஞ்சம் போன்றவை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானின் உயிர் நீர் என்று அழைக்கப்படும் சிந்து நதி நீரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானின் மக்கள் குடிநீருக்காக ஏங்கும் நிலை ஏற்படும்.
இதனிடையே சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு உரிய நதி நீரை இந்தியா தடுப்பது போராக கருதப்படும் என்றும் சிந்து நதி நீரை இந்தியா தடுத்தால் எங்கள் முழு பலத்தை திரட்டி பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.