சிறார்களால் தொடரும் விபத்துக்கள்... இரும்பு கரத்தை நீட்டுமா காவல்துறை!!

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்மை காலமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துகின்றனர்.. இந்த விபத்துக்கள் மூலம் ஏராளமான அப்பாவி உயிர்கள் பறிபோகிறது.. சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதற்கு காவல்துறையினரின் மெத்தன போக்கே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விவரிக்கிறது.. இந்த செய்தி தொகுப்பு...

சென்னை வடபழனியில் சிறுவன் இயக்கிய கார் தாறுமாறாக ஓடி ஏற்படுத்திய பயங்கர விபத்தில் முதியவர் உயிரிழந்தார். அதே போன்று சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்கள் இயக்கிய வாகனங்களால் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட கொடுத்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் இருந்தாலும் பெரும்பாலான பெற்றோர் அதை கண்டு கொள்வதில்லை. சர்வ சாதாரணமாக 18 வயது உட்பட்ட சிறுவர்கள் பெரும்பாலான சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதை கேட்டாலும் வாங்கி கொடுக்க கூடிய நிலையில் தான் தற்போது இருக்கின்றனர். சிறுவர்களின் நிர்பந்தத்தால் வாகனங்களை பெற்றோர்கள் ஓட்ட அனுமதி அளிக்கின்றனர். கடுமையான சட்டம் இயற்றியும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுகின்றனர். பெரும்பாலான சாலைகளில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை போக்குவரத்து காவல்துறையினர் கண்டும் காணாதது போல் இருந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன.

காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சிறுவர்கள் மட்டுமின்றி பெற்றோரையும் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என இந்திய தண்டனை சட்டம் இருக்கும்போது காவல்துறையினர் பெரும்பாலான காவல் நிலையங்களில் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளை கண்காணிப்பதில் பெற்றோர் காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கே உலையாக மாறக்கூடிய சூழல் இருக்க, போலீசார் கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறைந்தபட்சம் தண்டனையின் மீதுள்ள பயத்தின் காரணத்திலாவது இதுபோன்ற அசாதாரண சம்பவங்கள் தடுக்கப்படும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day