எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ள நிலையில் இந்த பாலம், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. அப்படி என்ன சிறப்பு விரிவாக பார்க்கலாம்..
அண்டை நாடான சீனா உலகிலேயே மிக உயரமான பாலத்தை சைலண்டாக கட்டியெழுப்பியிருப்பதன் காட்சிகள் தான் இவை..!
சீனா தனது நாட்டின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. புதிதாக அணைகள், பாலம், வானளவு உயர்ந்த கட்டடங்களை சீனா தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தான் பல உயரமான பாலங்களை சீனா கட்டியெழுப்பி வருகிறது. பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், கிராமப்புறங்களை இணைப்பதற்காக நதிகளின் மீது உயரமான பாலங்களை கட்டியுள்ளது சீனா. கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலுக்கு போக்குவரத்து என்பது அதி முக்கிய காரணியாக இருப்பதால் அதன் மீது சீனா அதீத கவனம் செலுத்தி வருவதன் விளையே உலகமே அன்னாந்து பார்க்கும் அளவுக்கு அங்கு கட்டப்பட்டு வரும் மிக உயரமாக பாலங்கள். சொல்லபோனால் உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, சீனாவின் குய்ஸுவு, யுனான் மாகாணங்களில் தான் இருக்கின்றன.
சீனாவில் கடந்த 2016ம் ஆண்டு கட்டப்பட்ட ஆயிரத்து 854 அடி உயரம் கொண்ட ட்யுஜ் பாலமே தற்போது உலகின் மிக உயரமான பாலமாக இருக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தில், பெய்பென் ஆற்றின் துணை நதியான நிஸு ஆற்றின் மீது இந்த பாலம் அமைந்துள்ளது. இந்தநிலையில் தான் தற்போது தலைநகர் பீய்ஜிங்கில் இருந்து சுமார் ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹுவாஜியாங்க் என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கிற்கு குறுக்கே உலகிலேயே மிகவும் உயரமான பாலத்தை கட்டியெழுப்பியிருக்கிறது சீனா.
இதற்கு ஹூவாஜியாங்க் கிராண்ட் கேன்யன் ஸ்டீல் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரத்தை கேட்டால் தலையே கிறுகிறுக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் உயரமே ஆயிரத்து 82 அடி. அதை அருகில் இருந்து அன்னாந்து பார்க்கவே முடியாது என்ற நிலையில் ஹூவாஜியாங்க் கிராண்ட் கேன்யன் ஸ்டீல் பாலத்தின் உயரம் 2 ஆயிரத்து 51 அடியாம். குய்ஸுவு மாகாணத்தில் பெய்பென் ஆற்றின் மீது, இரண்டு மிகப்பெரிய பள்ளத்தாக்குகளை இணைக்கும் விதமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு இடையே போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலத்தை கட்டமைத்திருக்கிறது சீனா.
இந்த பாலத்தை அமைப்பதற்காக, 22 ஆயிரம் டன் எடையிலான எக்கு தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அளவு எக்கு தூண்களைக் கொண்டு மூன்று ஈபிள் கோபுரங்களையே கட்டி விடலாம் என்பது தான் ஆச்சரியமே. பள்ளத்தாக்குகளுக்கு நடுவே இருப்பதால் குய்ஸுவு மாகாணம் சீனாவில் நகரங்களோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் தனிமைப்பட்டு கிடந்த நிலையில் தான் அதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2 ஆயிரத்து 200 கோடியை பாலத்தின் மீது அள்ளி இறைத்திருக்கிறது சீனா. சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தால் சுமார் 90 நிமிடங்களுக்கான பயண நேரம் வெறும் 2 நிமிடங்களாக குறையும் என்கிறார் திட்டத்தின் தலைமை இன்ஜினியர் லி ஜாவோ.
இதன் பாலம் மூலம் தங்களின் கட்டுமான திறமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருப்பதாக மார்தட்டி சொல்லும் சீனா, இந்த உயரமான பாலத்தின் மீதான பயணம் என்பது உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு குய்ஸுவு மாகாணத்தை ஒரு சுற்றுலா தளமாகவும் மாற்றும் என கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட பாலம் வரும் ஜுன் மாதம் திறக்கப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ள நிலையில், ஒரு RIDE போலாமா என்ற ஆசை அனைவரின் அடி மனதையும் தூண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.