செட்டிநாடு முதல் மயிலாடுதுறை வரை... நகரத்தாரின் பழமை மாறாத மாட்டு வண்டி பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

செட்டிநாடு முதல் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரை 300 ஆண்டுகளாய் நடைபெற்று வரும் பாரம்பரிய மாட்டு வண்டி பயணம்.. பழமை மாறாமல் லாந்தர் விளக்கு உதவியுடன் 54 வண்டிகள் ஒரு வார காலம் பயணப்பட்டு மீண்டும் அதே மாட்டு வண்டியில் சொந்த ஊர் திரும்பி செல்லும் நகரத்தாரின் ஒரு சுவாரசியமான பயணத்தை பற்றிய செய்தி தொகுப்பு தான் இது...

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும். இங்குள்ள தையல்நாயகி அம்மன் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு குலதெய்வமாக வணங்கப்படும் தெய்வமாகும். கோவலன் காலத்தில் பூம்புகார் நகரத்தில் வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார் என்று அழைக்கப்பட்டார்கள். அடிக்கடி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாதுகாப்பான இடமாக செட்டிநாடு பகுதிக்கு இவர்கள் புலம்பெயர்ந்தனர். இருந்தாலும், தங்கள் குல தெய்வத்தை காண்பதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி, கீழ் செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் மற்றும் நகரத்தார்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகை தருகின்றனர். 

அப்படி வரும்போது பெரும் பணக்காரர்களாக விளங்கும் சில நகரத்தார்கள் மாட்டு வண்டிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு , காவல்காரர்களுடன் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பிரயாணம் செய்து வைத்தியநாத சுவாமி மற்றும் தையல்நாயகி ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்து மீண்டும் மாட்டு வண்டியில் தங்கள் ஊருக்கு திரும்புகின்றனர். 

வரும்பொழுது தங்கள் குலதெய்வமான தையல்நாயகி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் மேல்புறம் கூண்டும் கீழே பொருட்கள் வைப்பதற்கான பெட்டி போன்ற சிறிய அறையுடன் இந்த வண்டிகள் தயார் செய்யப்படுகின்றன. விரிக்கப்பட்ட மெத்தைகள், மாட்டு வண்டியின் முகத்தடிக்கு கீழே மண்ணெண்ணையினால் எரியும் லாந்தர் விளக்கு இவற்றுடன் இரவில் மட்டும் பெரும்பாலும் பிரயாணம் நடக்கிறது. ஆண்டுதோறும் 54 வண்டிகள் இப்படி பிரயாணமாக வந்து வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு மீண்டும் செட்டிநாடு பகுதிக்கு செல்கின்றன.

300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் பயணத்தை கண் முன்னே காட்டி வரும் இந்த மாட்டு வண்டி பயணத்தின் போது, பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டி வருபவர்களுக்கும் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றனர். அதன்படி, ஆண்டுதோறும் மாட்டு வண்டிகளுக்கு தேவையான உதவிகளை இரவு நேரத்தில் கண்விழித்து செய்து வரும் மணி லட்சுமணன் என்பவர், இவர்களுக்கு உதவி செய்யும் போது, கடவுள் சேவையில் நம்மையும் இணைத்துக் கொண்ட ஆத்ம திருப்தி கிடைப்பதாக தெரிவித்தார். 

இந்த மாட்டு வண்டி பிரயாணத்தின் போது மாட்டு வண்டிகளை ஓட்டி வருபவர்கள் பல தொழில் செய்து கோடீஸ்வரர்களாக இருந்தாலும், பழமை மாறாமல் தங்களால் நாடோடி போன்று கடவுளை தரிசிக்க வருவது மனநிறைவைத் தருவதாக தெரிவிக்கின்றனர். 

Night
Day