எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனது சகோதரியின் பெயரில் சொத்தை எழுதி வைக்காததால் தங்கையின் கணவரை அடியாட்களுடன் சென்று மைத்துனர் வெளுத்து வாங்கிய சம்பவம் சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேசு பொருளாகியுள்ளது. விடாப்பிடியாக சொத்தைக் கேட்கும் வகையில் அப்படி என்னதான் நடந்தது என விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு தெத்துக்காடு பகுதியை சேர்ந்த சாமிதுரை மகன் ஈஸ்வரனுக்கும் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த சிவசக்திக்கும் ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி ஓர் ஆண்டு கடந்த பின்னரும் இருவருக்கும் குழந்தை இல்லை என்றும் இதனால் ஈஸ்வரனுக்கும் சிவசங்கரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை இல்லாத ஏக்கம் கணவருடனான தகராறு ஆகியவற்றால் மன வேதனையில் இருந்த சிவசக்தி, தனது கணவர் தன்னை கைவிட்டு விடுவாரோ என்ற எண்ணத்திலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் மீண்டும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்ட சிவசக்தி, தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனைவியைத் தேடிச் சென்று வீட்டிற்கு அழைத்துள்ளார் ஈஸ்வரன்.
அப்போது சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டால் கணவர் தன்னை கைவிட மாட்டார் என்று எண்ணிய சிவசக்தி, சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயரில் எழுதி கொடுத்தால்தான் வீட்டுக்கு வருவேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதைக் கேட்ட கணவர், நமக்கு குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் பெயரில் சொத்துக்களை எழுதி வைப்பதாக கூறி வீட்டுக்குப் போகலாம் என அழைத்துள்ளார். இதனை மனைவி ஏற்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவி வராததால் வருத்தத்துடன் ஈஸ்வரன் தனது வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சிவசக்தியின் தம்பி, இரவு அடியாட்களுடன் தெத்துக்காட்டிற்கு சென்று ஈஸ்வரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஈஸ்வரனின் வீடு, வீட்டில் இருந்த பொருட்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்ட உடமைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பெயரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.