எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடை பயிற்சி செய்வது போன்று, மாணவிகளை உளவு பார்த்த திமுக நிர்வாகி ஞானசேகரன், தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்காமல், சுதந்திரமாக நடமாடவிட்டது ஏன் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட, திமுக மாணவர் அணி சைதை கிழக்கு பகுதி துணை அமைப்பாளர் ஞானசேகரன், கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தாலும் பெரும்பாலான நேரங்களை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இருந்து வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திமுகவில் அதிகாரமிக்க நிர்வாகிகளுடன் நடை பயிற்சிக்கு செல்வதால் ஞானசேகரனை அங்குள்ள காவலாளிகள் முதல் கல்லூரி நிர்வாகிகள் வரை பெரிய ஜாம்பவான் போலவே பாவித்துள்ளனர்.
ஞானசேகரன் தேர்ந்தெடுக்கும் மாணவிகள், பிற மாணவர்களை காதலிக்கிறார்களா என்ற தகவலை விசாரிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். பறந்து விரிந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புதர் மண்டி கிடைக்கும் இடம், ஆள் அரவமற்ற பகுதி உள்ளிட்ட இடங்களை ஞானசேகரன் வேவு பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடை பயிற்சி செய்யும் போது அங்கு ஜோடியாக இருக்கும் மாணவ மாணவிகளை குறி வைத்து அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த ஞானசேகரன், இரவு நேரங்களில் மாணவிகளை குறி வைப்பதை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
காலை வேளைகளில் திமுக நண்பர்களுடன் வரும் திமுக பிரமுகர் ஞானசேகரன், இரவு நேரத்தில் தனது ஐ போனை எடுத்துக் கொண்டு வருவதும் அதன் மூலம் நெருக்கமாக இருக்கும் மாணவிகளை வீடியோ எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 140க்கும் மேற்பட்ட காவலாளிகள் ஞானசேகரனை தெரிந்து வைத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்தால் அவரை யாரும் தடுக்காமலும், கேள்வி கேட்காமலும் இருந்ததால், அதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட ஞானசேகரன், பல மாணவிகளை இது போன்ற படுபாதக செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
காலை நடை பயிற்சியின் போது திமுகவினரின் படை பலத்தோடு வரக்கூடிய ஞானசேகரனுக்கு சல்யூட் வைக்காத காவலாளிகளே இல்லை என்பது தான் உண்மை. அதுபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் சல்யூட் அடிக்கும் அளவிற்கு தனது சொந்த பல்கலைக்கழகம் போல ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தை பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்காமல், திமுக அரசு சுதந்திரமாக நடமாடவிட்டது ஏன் என்ற கேள்வி, அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.