எழுத்தின் அளவு: அ+ அ- அ
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய விளம்பர திமுக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது என வீரவசனம் பேசியிருப்பது, கடந்த காலங்களில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த பல சம்பவங்களின் நினைவலைகளை நிழலாட வைத்துள்ளது. அவை என்ன விரிவாக பார்க்கலாம்..!
எங்க தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு OUT OF CONTROL.. உங்களது மிரட்டல் உருட்டல்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தொண்டை கிழிய HIGH PITCH-ல் பேசியுள்ளார் விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. ஆனால் இதே திமுக.. ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க டெல்லியிடம் மண்டியிட்டதன் FLASHBACK-கை முதலமைச்சர் மறந்துபோனதை பார்க்கும் போது அல்சைமர் நோய் தாக்கமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..!
வீராணம் ஏரி ஊழல், பூச்சி மருந்து ஊழல், சர்க்கரை ஆலை ஊழல் உள்ளிட்ட திமுகவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 28 ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியால் அமைக்கப்பட்டது தான் சர்க்காரியா கமிஷன். இதெல்லாம் விஞ்ஞான ஊழல் என சர்க்காரியா கமிஷனால் விமர்சிக்கப்பட்ட பெருமை கருணாநிதியை சாரும்..
அப்படியிருக்கையில் சர்க்காரியா கமிஷனின் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அப்போதை காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியிடம் திமுக கூட்டணிக்காக மண்டியிட்டதன் வரலாறு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதையெல்லாம் மறந்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது என வீரவசனம் பேசியதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அதுமட்டுமா.. இந்திய பிரதமராக இந்திரா காந்தியும் இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இருந்த போது இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது கச்சத்தீவு.. அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை வரையறுக்கப்பட்டு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என முடிவானது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தது வேறுயாரும் இல்லை, எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான் என நரம்பு புடைக்க பேசிய தற்போதை விளம்பர முதலமைச்சரின் தந்தை கருணாநிதிதான்..
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு அடிபணிந்து, கோபாலபுரத்து குடும்ப நலனுக்காக தமிழரின் உரிமையை திமுக அடமானம் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் என கூறி திமுக தங்களை தன்மான சிங்கங்கள் போல முழங்கி வருவதை பார்க்கும் போது காமெடியாகவே இருக்கிறது.
அதுமட்டுமா.. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக காங்கிரசிடம் சிக்கி சின்னாபின்னபின்னமான கதைகளை கூட தற்போதை விளம்பர முதலமைச்சர் மறந்துபோனது தான் ஆச்சரியமாக உள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாளை ஈ.டி.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் திமுக-வை காங்கிரஸ் கையெழுத்து போட வைத்ததாக விமர்சனங்கள் எழுந்தது.
காங்கிரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அக்கட்சி முன்வைத்த அத்தனை நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு நீட்டிய இடங்களில் எல்லாம் திமுக கையெழுத்திட்டதாக கூறப்பட்ட நிலையில் டெல்லியின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் நாங்கள் அல்ல என திமுக முதலமைச்சர் ஸ்டாலின் சீறிய சீற்றம் தமிழக மக்களின் கேலிக்கு ஆளாகியிருப்பது தான் ஹைலைட்டே..
இப்படி டெல்லியிடம் திமுக மண்டியிட்டதாக கூறப்படும் வரலாறுகள் பல இருக்க, எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான் என ஸ்டாலின் வீரவசனம் பேசியிருப்பது அரசியல் அறிந்த மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.