எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடல் சோர்வடைவதை தடுக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன?.. இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. பல நகரங்களில் இப்போதே வெயில் சதமடித்து வருகிறது. சில இடங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தலையில் துணிகளை கட்டிச் செல்வது, குடை பிடித்தபடி செல்வதுடன் இளநீர், தர்பூசணி ஜூஸ் உள்ளிட்ட குளிர் பானக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதோடு இரவிலும் புழுக்கத்தால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது
நீர் சத்து குறைந்து மயக்கம் ஏற்படுவது, தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதால் கிட்னியில் கல் பாதிப்பு, வயிற்று வலி, கண்களில் நீர் சத்துக்கள் குறைந்து கண் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக கூறுகிறார் பொது நல மருத்துவர் கார்த்திகேயன்.
இதனைத் தவிர்க்க வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். தண்ணீர் குடிப்பது மிக முக்கியமானது என்றாலும் வெறும் தண்ணீராக மட்டும் அருந்தாமல், உப்பு சத்துக்கள் இருக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இப்போதே, வெயிலின் தாக்கம் இப்படி இருந்தால், மே மாதம் மற்றும் 'கத்தரி' வெயில் காலத்தில் எப்படி இருக்குமோ என பொது மக்கள் இப்போதே கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.