தகிக்கும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்... உடலை பாதுகாப்பது எப்படி..!

எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் உடலுக்கும் ஏற்படும் ஆபத்தும், அவற்றை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரையும் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கோடை காலம் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் தினந்தோறும் தகிதகித்து வரும் வெயிலால், பொதுமக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்வதற்கு தயங்கி வரும் மக்கள், இன்னும் 3 மாதத்திற்கு கோடை காலத்தை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என விழிப்பிதுங்கி யோசித்து வருகின்றனர்.

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்பதுபோல், தமிழகத்தில் கடந்த நாட்களை விட, இனி வரும் நாட்களில் தான் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுபோன்ற வெயில் காலத்தில் வெளியில் சுற்றுபவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வியர்வை வெளியேறும். அவ்வாறு வெளியேறும்போது உடலில் உப்புச் சத்துப் பற்றாக்குறையும், நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறும் மருத்துவர்கள், இதனால் தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.

வெயில் காலத்திற்கு உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையெனில் மயக்கம் ஏற்படும் எனவும், சில சமயம் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆதலால் வெளியில் செல்லும்போது, மறக்காமல் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடலில் வெப்பம் அதிகமாகும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், குமட்டல், வாந்தி, தலைவலி, வறண்ட சருமம், இதய துடிப்பு அதிகரிப்பு ஆகியவை இதற்கான அறிகுறிகள் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு தவிர்க்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும், பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

இவைகள் உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, வயிற்றின் அமிலத்தன்மை அதிகமாகாமல் இருக்க உதவுவதாகவும் கருதுகின்றனர். அதேபோல் உண்ணும் உணவோடு, நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் மருத்துவர்கள், இதன்மூலம் வெயில் காலத்தில் உடல் சூட்டையும், ஆரோக்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர்.

Night
Day