எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக, தர்பூசணி, இளநீர், நுங்கு கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். கடந்தாண்டை விட இந்தாண்டு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால், தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கத்தாலும், இரவில் வெப்பத்தின் தாக்கத்தாலும் பொதுமக்கள் அல்லல் பட்டு வருகின்றனர். குறிப்பாக 12 மணி முதல் மாலை 5 மணி வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அதிகளவு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தாலும் பொதுமக்கள் வேலைகளுக்காகவும், தேவையான பொருள்களை வாங்க வரும்போது குடைகளை பிடித்தபடியும் தலையில் துணியை கொண்டு மூடிக்கொண்டும் வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக குளிர்பானங்களை அருந்துவது, நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்பது, நீர் நிலைகளை நாடிச் செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு உத்திகளை பொதுமக்கள் கையாண்டு வருகின்றனர். இருப்பினும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களால் தப்பிக்க முடியவில்லை. வரும் மே.4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்திருக்கிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாகவே இருந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் அதிகப்படியாக 104 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பநிலை பதிவாகி வருவதால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக, தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், பழச்சாறு, கரும்பு ஜூஸ் உள்ளிட்ட கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். முக்கியமாக தர்பூசணியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டு விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆங்காங்கே சாலையோர மரங்களில் இளைப்பாறி விட்டு செல்கின்றனர். ஹெல்மெட் அணிந்து கொண்டாலும் அதிக அளவு வேர்வை வெளியேறியதாகவும் தெரிவிக்கின்றனர்.
நாளுக்குநாள் வெயில் அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக பொதுமக்கள் அவரவர் வீடுகள் முன்பாக மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.