எழுத்தின் அளவு: அ+ அ- அ
புத்தகங்களை சுமந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சிலர் சைக்கிளில் தண்ணீர் குடங்களுடன் பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்...
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மாரம்பாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரை 300 முதல் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே பள்ளியில் இன்று காலை உணவு சமைப்பதற்காக தண்ணீர் இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வருமாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து சைக்கிளில் சென்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு குடம் தண்ணீரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று பள்ளிக்கு எடுத்து வந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்த சிறுவன் ஒருவன் பள்ளியின் கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சைக்கிளில் இருந்து தண்ணீர் குடங்கள் விழுந்த உடன் செய்வதறியாது திகைத்து நிற்கும் காட்சி காண்போரை கலங்க வைக்கிறது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பள்ளிக்கு கல்வி பயில வரக்கூடிய மாணவர்களை தண்ணீர் எடுக்க பயன்படுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளியில் மாணவர்களை இவ்வாறு வேலை வாங்கினால் அவர்கள் வெளியில் செல்லும் இடங்களில், மாணவர்களுக்கு எதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து வரும் வீடியோ வைரலான நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்மோட்டார் வேலை செய்யாததை அடுத்து ஒருநாள் மட்டும் மாணவர்களிடம் தண்ணீர் எடுத்துவர கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான விளக்கம் கேட்டு, அதன் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமே தவிர..., மாணவர்களை வைத்து தண்ணீர் எடுத்துவர சொல்வது என்பது நல்ல செயல் அல்ல. பள்ளியில் மின்இணைப்பில் எதாவது குறையிருந்தால் பள்ளி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதனை சரிசெய்ய வேண்டுமே தவிர மாணவர்களை வெளியில் அனுப்பி தண்ணீர் எடுத்தவர கூறுவது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.