தனியார் அறையில் "ரகசிய கேமரா" பெண்களே உஷார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சொந்த வேலைக்காக வெளியே பயணிக்கும் பெண்கள் தனியார் அறையில் உடை மாற்றும் போது சில கயவர்கள் ரகசிய கேமராக்களை பொருத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த என்ன செய்வேண்டும்?  பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன? என்பது குறித்து சைபர் கிரைம் வழக்கறிஞர் வழங்கிய அறிவுரைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ராமேஸ்வரத்தில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்துவிட்டு தனது குடும்பத்துடன் உடை மாற்றுவதற்காக லட்சுமி டீ ஸ்டாலில் உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் டைல்ஸ் கற்களுடன் சேர்த்து சிறிய ரக கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தார். இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

அறிவியல் எந்த ரூபத்தில் வளர்ந்தாலும், ஒரு சில கயவர்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, உடை மாற்றும் அறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் ரகசிய கேமரா வைத்து வக்கிரத்தை அரங்கேற்றிவருவதும் தொடர்கதையாகி வருகிறது. காம இச்சை கொண்ட  ஆண்களின் வலையில் விழாமல், பெண்கள் எவ்வாறு ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு தகவல் அளித்துள்ளார் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

சொந்த வேலைக்காகவோ அல்லது பல்வேறு காரணங்களுக்காகவோ வெளியே பயணிக்கும் பெண்கள், ஹோட்டல் அறைகளில் உடை மாற்றுவது அவசியமாகிறது. அவ்வாறு செல்லும் பெண்கள் முதலில், அறையில் ரகசிய மேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சற்று உன்னிப்பாக கவனிக்கவேண்டும். ஹோட்டல் அறைகளில் உள்ள பூந்தொட்டிகள், ஏசி மீது பொருத்தப்படும் உபகரணங்கள், அந்த அறைக்கு அழகு சேர்க்கும் விதமாக பயன்படுத்தப்படும் பொருட்கள், சார்ஜ் போர்டுகளை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

அறையை இருட்டாக்கி விட்டு கேமராக்களில் வெளிப்படும் கதிர்வீச்சுகளை கொண்டு ரகசிய கேமராக்கள் குறித்து கண்டறியலாம் என தெரிவிக்கும் வழக்கறிஞர், செல்போனில் யாருடனாவது பேசிக்கொண்டு அறை முழுவதும் நடந்தால் கேமராக்களில் வெளிப்படும் கதிர்வீச்சின் காரணமாகவும் செல்போன் சிக்னல் தடைபட்டு அதன்மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

ஆன்லைனிலும், சாதாரண கடைகளிலும் இது போன்ற கேமராக்களை வாங்கும் நபர்கள், அதன் மூலம் கிடைக்கும் அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணைய தளங்களில் வெளியிட்டு, டாலர் கணக்கில் சம்பாதிப்பதாகவும், மேலும், அந்த ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் எச்சரிக்கிறார் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

ஒரு சிம் வாங்கினால் அதற்கு அடையாள அட்டை கட்டாயம் என தெரிவிக்கும் அரசு, இதுபோன்ற சிறிய ரக கேமராக்களை வாங்கும் நபர்களிடமும் எதற்காக, ஏன் இந்த கேமராவை வாங்குகிறீர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தால் இதுபோன்ற குற்றச்சம்பவம் குறையும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டால் அதற்காக நாம் வருத்தப்படவோ, துன்பப்படவோ கூடாது என நம்பிக்கை அளிக்கும் வழக்கறிஞர் கார்த்திகேயன், தைரியமாக அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும், கயவர்களை காவல்துறையிடம் புகார் அளித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

Night
Day