தமிழகத்தின் 13 பேருக்கு பத்ம விருதுகள் - கெளரவித்த குடியரசு தலைவர்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் அஜித்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் உட்பட தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பத்ம விருதுகள்தான். கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இதில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு வழங்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. அவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பத்ம விருதுகள் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ள நிலையில் முதல்கட்ட விருது வழங்கும் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் மூன்று பேர் பத்மபூஷன் விருது மற்றும் 10 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெறுகின்றனர். 

அந்தவகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து நல்லி குப்புசாமி செட்டி, சோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதும், குருவாயூர் தொரை, தாமோதரன், ஸ்ரீ லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ்  புரிசை கண்ணப்ப சம்பந்தம், அஷ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், பத்மஸ்ரீ விருது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், விருதுகளை எதிர்பார்த்து ஒருபோதும் கிரிக்கெட் விளையாடுவது இல்லை என்றும், கிரிக்கெட் போட்டியில் சிறப்பான பயணத்திற்கான ஒரு ஊதியமாகவே பத்மஸ்ரீ விருதை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உலகின் மிக உயர்ந்த நான்காவது சிவிலியன் விருதை தனக்கு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி எனவும், பிறந்தால் சாதிக்க வேண்டும், அப்படி தான் சாதித்ததற்கு கிடைக்கப்பெற்றுள்ள விருதாக பத்மஸ்ரீ விருதை பார்ப்பதாகவும் பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் தெரிவித்துள்ளார். தனது பத்ம விருதை தன்னைப் போன்ற சமையல் கலைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியிருப்பது தான் பணியாற்றும் சிற்பக் கலைத்துறைக்கும் தனது குடும்பத்திற்கும் தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுக்கும் கிடைத்துள்ள பெரும் பெருமையாக கருதுவதாக ராதாகிருஷ்ணன் தேவ சேனாதிபதி தெரிவித்துள்ளார். பத்ம விருதுகளை வென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் திரளான மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day