எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையாலும், கடின உழைப்பாலும் புகழின் உச்சத்திற்குச் சென்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். எளிய பின்புலத்தில் இருந்து வந்து போட்டி நிறைந்த சினிமா உலகில், சிவகார்த்திகேயன் சாதித்தது குறித்து அவரது பிறந்த நாளான இன்று விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறுவது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சினிமாவில் நம்மில் ஒருவராக இருக்கும் ஒரு சாமானியன், பெரிய இடத்திற்கு வந்தால் அதை நம்முடைய வெற்றியாகத்தான் பார்ப்போம். அது போன்ற ஒரு நடிகராக இப்போது நம் முகமாக மாறியுள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்..
திருச்சியில் பிறந்து வளர்ந்தவரான சிவகார்த்திகேயன் கல்லூரி பருவத்திலிருந்தே கலை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் ஸ்டேண்ட் அப் காமெடி கலைஞராகப் பங்கேற்று, உள்ளூர் அளவில் திறமைசாலியாக அங்கீகரிக்கப்பட்டவர். உள்ளூரில் பிரபலமான சிவகார்த்திகேயனை அந்த திறமைதான் சென்னைக்கு வர வைத்தது
தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி பல்வேறு கனவுகளுடன் சென்னை வந்தவருக்கு தனியார் டிவி நடத்திய ஒரு மிமிக்ரி ஷோவில் வாய்ப்பு கிடைத்தது. அங்கே தன்னுடைய ஒட்டு மொத்த திறமையையும் கொடுத்த அவருக்கு கிடைத்த பரிசு தான் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டம்.
இப்படி, பல்வேறு திறமைகளில் கலக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை, முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில், அவருக்கு நண்பனாக நடித்திருப்பார் சிவகார்த்திகேயன்.
பின்னர் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு எதிர் நீச்சல் படம் மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் திறமையை கவனித்த நடிகர் தனுஷ், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமாரை எதிர்நீச்சல் படத்தை இயக்க வைத்த நிலையில், அந்த படம் வெற்றிபெற்றது.
ஆனால், சிவகார்த்திகேயனை பட்டிதொட்டி எல்லாம் கொண்டுபோன படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான்.. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும், சூரியும் சேர்ந்து செய்த காமெடி கலாட்டா திரையரங்குகளை அதிர வைத்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு, வெளிவந்த மான் கராத்தே படமும் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
தொடர்ந்து காக்கிச் சட்டை, ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டுப்பிள்ளை, டான், பிரின்ஸ், மாவீரன், அயலான் என தொடர்ந்து சிவகார்த்திகேயன் வீறுநடை போட்டு வந்தநிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வெளியான அமரன் படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் அதிகபட்ச வசூலை குவித்தது என்றே கூறலாம். இப்படி சினிமாவில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய நடிகராக உருவாகி உள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னுடைய 25-வது படமான பராசக்தியில் நடித்து வருகிறார்.. இந்த படமும் அவருக்கு இன்னொரு ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான்... இப்படி தன்னுடைய திறமையாலும், கடின உழைப்பாலும் பல்வேறு தடைகளை தாண்டி உச்சத்துக்கு வந்த தமிழ் சினிமாவோட இளவரசன் சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.