எழுத்தின் அளவு: அ+ அ- அ
டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது முதல் செந்தில் பாலாஜிக்கு சாய்ஸ் கொடுத்தது வரை திமுகவுக்கு ஒரே நாளில் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் மாறி மாறி ஷாக் கொடுத்திருப்பது அக்கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி நீதிமன்றங்கள் திமுகவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியங்களின் லிஸ்ட் என்ன? விவரம் என்ன? விரிவாக பார்க்கலாம்..
தமிழகத்தில் 1996-2001ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை 2002-ல் வழக்கு தொடர்ந்தது. துரைமுருகன் மட்டுமின்றி அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீதும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அனைவரையும் விடுவித்து வேலூர் நீதிமன்றம் கடந்த 2007ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி 2013ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த உத்தரவால் திமுக-வின் மேலிட வட்டாரம் நொந்து போயிருந்த நிலையில்தான் அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி இடி விழுந்தது. சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான் அது. பொன்முடியின் வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என சீறிய நீதிபதியின் அதிரடி திமுகவை திகைக்க வைத்துள்ளது.
அப்போதுதான் இன்னும் லிஸ்ட் முடியல என்பது போல், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்து தவறு செய்து விட்டதாகக் கருதுவதாக கடுமை காட்டியது உச்சநீதிமன்றம்.
அதுமட்டுமா.. அடுக்கடுக்கான கேள்விகளால் சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம் அமைச்சர் பதவியா? ஜாமீனா? என திங்கள்கிழமை வரை செந்தில் பாலாஜிக்கு சாய்ஸ் கொடுத்து அனுப்பியிருக்கிறது. இதில் செந்தில் பாலாஜி எதை தேர்ந்தெடுத்தாலும் அது திமுகவுக்கு பாதகம்தான் என்பது ஊரறிந்த ஒன்று..
டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுகவின் தலையில் இடியாய் இறங்கிய அதிர்ச்சியில் இருந்தே அக்கட்சி மீளமுடியால் இருந்த நேரத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பார்க்கும் போது திமுகவுக்கு ஏழரை சனி உச்சத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
ஏற்கெனவே காற்றாலை அமைப்பதாக சொல்லி வாங்கிய கடனை TVH கட்டுமான நிறுவனத்துக்கு சென்றது எப்படி என்ற ஒற்றை புள்ளியை வைத்து திமுக அமைச்சர் நேருவின் ராஜ்ஜியத்துக்குள் ரெய்டு நடத்தி திமுக மேலிடத்து குடும்பத்தையே அசைத்து பார்க்கும் அளவுக்கு ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல் அமைச்சர் எ.வ.வேலுவும் எம்.பி. ஜெகத்ரட்சகனும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை பிடியில் சிக்கி விழிபிதுங்கி கிடக்கின்றனர்.
அதனால், திமுக-வின் முக்கிய அமைச்சர்கள் மீதான வழக்குகளும் மத்திய அமைப்புகளின் அதிரடிகளையும் பார்க்கும் போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் அக்கட்சியின் முக்கிய தலைகள் களி தின்னக் கூடும் என தெளிவாகத் தெரிவதாக அரசியல் வட்டாரத்தில் ஆரூடம் கூறப்படுகிறது.