எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோயில் உண்டியலில் திருட முயன்ற போது, உண்டியலுக்குள் கை மாட்டிக்கொண்டு ஊர் மக்களிடம் திருடன் ஒருவன் சிக்கிய சம்பவம் அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. உண்டியலும், கையுமாய் திருடன் இரவு முழுவதும் கொறட்டை விட்டு உறங்கியச் சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பாட்டுக்கு நான் அடிமை என்ற படத்தில் நடிகர் செந்தில் காசுக்கு ஆசைப்பட்டு சொம்புக்குள் கையை விட்டு மாட்டிக்கொண்டு, பாடாய் படும் நகைச்சுவை காட்சியை பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்திருப்போம். அதேபோல், நிஜத்திலும் ஒரு சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டி கிராமத்தில் பெரியாண்டீச்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள உண்டியலை பல நாட்களாக நோட்டமிட்ட நபர் ஒருவர் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை அடிப்பதற்காக கைவரிசை காட்டினார். ஆனால் அதில் ட்விட் என்னவென்றால் உண்டலில் இருந்து பணத்தை எடுப்பதற்காக கைவிட்ட போது, எதிர்பாராத வகையில் கை சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ந்து போன அந்த நபர் முயன்று உண்டியலில் இருந்து கை வரவில்லை. ஒருகட்டத்தில் ஓய்ந்து போன அந்த நபர் உண்டலில் கை சிக்கிய படியே இரவு முழுவதும் உறங்கிக் கிடந்துள்ளார். பின்னர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அதியமான்கோட்டை காவல் துறையினர், உண்டியலில் இருந்து அந்நபரின் கையை வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அது எளிதில் முடியாத காரணத்தால் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடினர். பின்னர், சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், இரும்பு வெட்டப் பயன்படுத்தும் கருவியைக் கொண்டு உண்டியலை வெட்டி, அந்நபரின் கையை வெளியே எடுத்துள்ளனர்.
பின்னர், அவரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரித்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரிய வந்துள்ளது. அவர் தங்கராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருந்துள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த திருடன் திருட நினைத்தது, அந்த உண்டியலில் இருந்தது வெறும் 500 ரூபாய் மட்டும் தான். ஆனால் பணத்திற்கு பதிலாக சிறை சென்றது தான் மிச்சம்..