எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இயங்கி வரும் அரசு பள்ளி வகுப்பறையில் மர்மநபர்கள் மனிதக் கழிவை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பல்லடம் அருகே பள்ளி வகுப்பறையில் மனிதக் கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் காலை வகுப்பறைகளை ஆசிரியர்கள் திறந்து உள்ளனர்.
அப்போது 10-ம் வகுப்பு வகுப்பறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனிதக் கழிவுகள் வீசப்பட்டிருந்ததை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர், வகுப்பறையில் மனித கழிவுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வகுப்பறை முழுவதும் வீசப்பட்டிருந்த மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மனித கழிவுகளை வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது பள்ளியில் பயிலும் மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது போல் மனித கழிவை வீசி சென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை இரவு நேரத்தில் பள்ளி அருகே சமூகவிரோத செயல்களில் ஈடுபட வந்தவர்கள் யாரேனும் இதை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு வீசிப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது, பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் மனித கழிவுகள் வீசிப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.