தேங்கிக் கிடக்கும் குப்பைகள்... சுகாதார சீர்கேட்டிற்கு அடையாளமான மேலப்பாளையம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதி பெரும் சுகாதார சீர்கேட்டிற்கான அடையாளமாக மாறியுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாகவும் கால்வாய்கள் குப்பைக் கூளங்களுடனும் காட்சி அளிக்கின்றன. இதனால் மேலப்பாளையம் மக்கள் அடையும் இன்னல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக தனி நகராட்சியாக செயல்பட்டு வந்ததுதான் மேலப்பாளையம். பாளையங்கோட்டைக்கு மேற்கில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள இடமும், அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பகுதியாகவும், 100-க்கும் மேற்பட்ட தெருக்களையும் கொண்டதாகவும் மேலப்பாளையம் உள்ளது. 

ஆனால், சுகாதாரம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் அளவிற்கு மேலப்பாளையம்  நாறிக் கிடப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வசித்து வந்தாலும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து தரப்படவில்லை. சந்தை பகுதியில் இரண்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளும், கீழாப்பாளையம் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தாலும் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மேலாப்பாளையம் மக்கள்.

சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாகவும் பாளையம் கால்வாய்கள் அனைத்தும் குப்பை கூளங்களாகவும் காட்சி அளிக்கின்றன. இறைச்சிக் கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்படுவதால் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேட்டால் டெங்கு, மலேரியா காலரா உள்ளிட்ட நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் அலட்சிய மனப்போக்குடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தங்கள் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சாலைகளை சீரமைத்து, தேவையான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மேலப்பாளையம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day