தைல மரக்காட்டிற்குள் ஓடி ஒளிந்த மாணவர்கள்... தேடிப்பிடித்து தேர்வெழுத வைத்த HM

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த ஆறாம்  மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சகோதரர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர் தேடிப் பிடித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்துள்ளார். பெற்றோர்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற நிகழ்வு குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறம், புனித அற்புதமாதா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆலங்குடி கலிபுல்லா நகர் ஏடி காலனியைச் சேர்ந்த முகமது யாசின் சபுருநிஷா தம்பதியின் மகன்களான அர்ஜத் 8-ம் வகுப்பும் முகமது யூனுஸ் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடைபெற இருந்த நிலையில், அர்ஜத்- முகமது யூனுஸ் சகோதரர்கள் பள்ளிக்கு வரவில்லை. 

இதையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் சூசைராஜ், ஒரு மாணவனை உடன் அழைத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில், தேர்வுக்கு மட்டம் போட்ட சகோதரர்களின் வீட்டைத் தேடிச் சென்றுள்ளார்.  வீட்டுக்கு வந்த தலைமை ஆசிரியரை பார்த்த சகோதரர்கள் தலை தெறிக்க ஓட்டம் எடுத்து, தைல மரக்காடு மற்றும் முந்திரிக்காடு பகுதிகளில் ஒளிந்துள்ளனர். தொடர்ந்து பள்ளிக்குத் திரும்பிய தலைமை ஆசிரியர், காலை 10 மணிக்கு பிறகு மீண்டும் மீண்டும் அந்த மாணவர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அவர்களது தாயாரிடம் கேட்டபோது அவர் தனது மகன்களை காணவில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் அருகில் உள்ள கயிறு தொழிற்சாலையில் ஒளிந்திருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போது மீண்டும் இருவரும் ஓட்டமெடுக்க, அவர்களை விரட்டிப் பிடிதித தலைமை ஆசிரியர், இருவரையும் அவர்களது தாயாரிடம் ஒப்படைத்துள்ளார். 

பின்னர் முழு ஆண்டு தேர்வு நடைபெறுவதால் இருவரும்  தேர்வு எழுத வராததால் தேடி வந்ததாக கூறிய தலைமை ஆசிரியர், முழு ஆண்டு தேர்வை மாணவர்கள்  கட்டாயம் எழுத வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து மாணவர்களின் தாயார் உடனடியாக தனது மகன்களை பள்ளி சீருடை அணிய வைத்து தலைமை ஆசிரியருடன் அனுப்பி வைத்தார். தலைமை ஆசிரியரும் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு மாணவர்களையும் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார். 

மாணவர்களின் கல்வி அவர்களின் எதிர்காலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து,  தேடிச் சென்று அழைத்து வந்து தேர்வெழுத வைத்த தலைமையாசிரியர் சூசைராஜுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில்   வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Night
Day