தொடரும் விவசாய மின் வயர் திருட்டு... தவிக்கும் விவசாயிகளுக்கு கிடைக்குமா தீர்வு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் பகுதியில் விவசாய மின்மோட்டார்களை இயக்குவதற்காக பொருத்தப்பட்டுள்ள காப்பர் வயர்கள், மர்ம நபர்களால் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளின் வேதனையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ செட்டியாப்பட்டி, மேலசெட்டியாப்பட்டி, வடக்கு செட்டியாப்பட்டி, கீழக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. மின் மோட்டார் அமைத்து அதன் மூலம் தண்ணீரை பெற்று மலர் சாகுபடி மற்றும் நெல் உள்ளிட்ட தானிய சாகுபடிகளில் அந்த பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக மின் கம்பத்தில் இருந்து மின் மோட்டார்களுக்கு செல்லும் காப்பர் வயர்களை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அறுத்து திருடி செல்வது வாடிக்கையாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவரை 25க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு செல்லும் காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என குமுறுகின்றனர் விவசாயிகள். ஒரு மின் மோட்டாருக்கு மீண்டும் காப்பர் வயர் பொருத்த வேண்டும் எனில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக கூறும் விவசாயிகள், ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் தவிக்கும் தங்களுக்கு இதுபோன்ற தொடர் திருட்டு மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிகின்றனர்.

திருடு போன காப்பர் வயர்களை மாற்றக்கூட வழி இன்றி பலர் தவித்து வரும் வேளையில், தண்ணீர் இன்றி வயல்களும் வறண்டு வருவதாகவும் விவசாயிகள் குமுறுகின்றனர். மழையை நம்பியும், கிணற்று நீரை நம்பியும் விவசாயம் செய்வதாகவும், மழை இல்லாத காலத்தில் கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்வதாகவும் கூறுகின்றனர் விவசாயிகள்.

வயர்களையும், மோட்டர்களையும் மீண்டும் வாங்குவதற்கு பணம் இல்லாமல் கடனை வாங்கி வயர்களை பொருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, நெல் மற்றும் சோளம் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கருகிப் போய் விடுவதால் பட்ட கஷ்டம் வீணாகி போவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

திருட்டு சம்பவம் தொடர்பாக சம்பட்டி விடுதி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

இனியாவது காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கண்ணீரில் தவிக்கும் தங்களின் துயரத்தை துடைப்பதுடன், தொடர் திருட்டையும் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.

Night
Day