எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடவு செய்த நெற்பயிர்களை டிராக்டர் ஓட்டி அழித்ததோடு தட்டிக்கேட்ட பெண் மற்றும் இளைஞரைத் தாக்கி திமுக பிரமுகர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் இருந்து சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய அராஜகம் தொடர்பான விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பேரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. அவருக்கும் அவரது சகோதரர்கள் சுப்பிரமணி மற்றும் சண்முகம் ஆகியோருக்கும் பூர்வீக சொத்தான மூன்றரை ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு பாகம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுப்பிரமணி தனது நிலத்தையும் சேர்த்து விவசாயம் செய்யுமாறு துரையிடம் கூறியுள்ளார். அதன் பேரில் துரை குடும்பத்தினர் சுப்பிரமணி நிலத்திலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநரான சண்முகமும் சென்னையில் உள்ள திமுக பிரமுகரான அவரது மருமகன் பாபுவும் சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளதாக கூறி சுப்பிரமணியின் 28 சென்ட் நிலத்தை உழக் கூடாது என கடந்த சில ஆண்டுகளாகவே துரை குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. ஆனால், நிலத்தின் பட்டா சுப்பிரமணி பெயரில் உள்ளதாகவும் உரிய ஆவணங்கள் கொண்டு வந்தால் நிலத்தை ஒப்படைப்பதாக துரை மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான 28 சென்ட் இடத்தில் துரை நெல் பயிர் நடவு செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட சண்முகமும் அவரது மருமகன் பாபுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து 10 க்கும் மேற்பட்ட அடியாட்களை அழைத்து வந்து நடவு செய்த நெல்பயிர்களை டிராக்டர் ஓட்டி அழித்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த துரையின் மனைவி கௌரியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலால் நிலைகுலைந்த கௌரி சம்பவ இடத்திலேயே மயங்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். அப்போது சண்முகம் மற்றும் திமுக பிரமுகர் பாபுவின் இந்த அட்டூழியங்களை எல்லாம் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த துரையின் மகன் விஜயையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விஜய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை காவல்துறையினர் முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் விஜய் மற்றும் சுப்பிரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் பயிர்களை அழித்து தாக்குதல் நடத்திய சண்முகம் தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் வேதனையடைந்த துரை குடும்பத்தினரும் சுப்பிரமணி குடும்பத்தினரும் சேத்துப்பட்டு காவல் துறையினர் சண்முகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளித்தனர். சண்முகம், அவரது மருமகன் திமுகவை சேர்ந்த பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அந்த புகாரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு உழியரான சண்முகம் அவரது மருமகன் திமுகவைச் சேர்ந்த பாபு மற்றும் சேத்துப்பட்டு காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...