நிவாரணம் வழங்காத விளம்பர அரசு - கொந்தளிப்பில் விழுப்புரம் மக்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்காததால் கொந்தளித்துள்ள மக்கள், தங்களை ஏமாற்றும் திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர். ஏழை மக்களின் துயரத்தை துடைக்காமல் அலட்சியப்போக்குடன் செயல்படும் விளம்பர திமுக அரசால் பாதிக்கப்பட்டவர்கள் படும் அல்லல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த 30ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டம் அதிகனமழையை சந்திக்க நேரிட்டது. மாவட்டத்தையே புரட்டிப்போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன. 

புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விளம்பர திமுக அரசு, பாதிப்புக்குப்பின் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாக செயல்படும் விளம்பர அரசு, அறிவித்தபடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ரூபாய் நிவாரண நிதி வழங்காமல் பல்வேறு இடங்களிலும் இருட்டடிப்பு செய்து வருகிறது. 

ஆளும் திமுகவினரின் ஆதரவாளர்கள் கைக்காட்டும் நபர்களுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய்க்கான நிவாரண நிதி சென்றடைவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உண்மையான மக்களுக்கு சென்று சேருவதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற குளறுபடிகள் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண நிதி கிடைக்காத பொதுமக்கள், பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டும், நியாய விலைக் கடைகளை முற்றுகையிட்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது.

ஏற்கெனெவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்காமல் திமுக அரசு போக்குக்காட்டி வருவது பொதுமக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. விளம்பர அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் இனி வரும் தேர்தல்களில் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும், ஓட்டு கேட்டு எங்கள் ஊருக்குள் திமுகவினர் யாருமே இனி வரக்கூடாது என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே துயரத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் அலைக்கழித்து வரும் விளம்பர திமுக அரசு, இனிமேலாவது பாரபட்சம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day