நேதாஜியின் சீடருக்கு 100வது பிறந்தநாள் விழா - 2500 பேருக்கு அறுசுவை கறிவிருந்து ஏற்பாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தியாகி வி.கே.செல்லம் என்பவரின் 100வது பிறந்தநாள் விழா, மார்ச் 16ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு தடபுடலாக அறுசுவை கறி விருந்து அளிக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அமைதியான முறையில் சுதந்திரத்திற்காக போராடினர். ஆனால், ஆயுதம் தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைக்கு போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது வீரமும், பேச்சும் கவர்ந்து ஆயிரக்கணக்கானோர் நேதாஜி படையில் சேர்ந்து விடுதலைக்காக பாடுபட்டனர். அப்படி, நேதாஜி உடன், இந்தியா விடுதலை அடையும் வரையில் உடன் பயணித்தவர் வி.கே.செல்லம். 

பர்மாவில் பிறந்து வளர்ந்த செல்லம், அங்கு திருமணமும் முடித்து, பர்மா ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் நேதாஜியின் பேச்சும், செயலும் கவரவே, நேதாஜியின் படையில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக பாடுபட்டுள்ளார்.

1964ம் ஆண்டு மனைவி கண்ணம்மா உடன் தமிழ்நாட்டுக்கு திரும்பியிருக்கிறார் செல்லம். சென்னை வியாசர்பாடியில் அவர் குடியேறியபோது, அப்பகுதி முழுவதும் வெறும் முள்ளுக்காடாக இருந்துள்ளது. அப்பகுதியை குடியிருப்பதற்கான இடமாக மாற்றி, மக்களுடன் இணைந்து அப்பகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார். வியாசர்பாடியில் முதல் முறையாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை அமைத்திருக்கிறார் செல்லம். ஆண்டுதோறும் நேதாஜியின் பிறந்த நாளின்போது, அப்பகுதி மக்களுடன் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்.

வி.கே. செல்லம் குறித்து அறிந்து, சென்னை வியாசர்பாடிக்கு நேரில் வந்து, நேதாஜியின் மகள் அனிதா போஸ் நலம் விசாரித்து சென்றுள்ளார். அதன்பிறகே வி.கே.செல்லம் வெளி உலகுக்கு வெகுவாக அறியப்பட்டுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு வி.கே.செல்லத்தை நாடாளுமன்றத்திற்கு அழைத்து மத்திய அரசு மரியாதை செலுத்தியுள்ளது. வி.கே.செல்லத்தை நேரில் அழைத்த பிரதமர் மோடி, அவருக்கு மரியாதை செய்து, நேதாஜி குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் கேட்டு தெரிந்திருக்கிறார்.

நேதாஜியின் சீடரான வி.கே.செல்லம், வியாசர்பாடியில் ஒரே வீட்டில் 2 மகள்கள், 6 மகன்கள், 42 பேரக் குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். தனி குடித்தனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூட்டுக்குடும்பத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்தி முன் உதாரணமாக திகழ்கிறார் வி.கே.செல்லம். அவர், நூறு வயதை முடித்து, மார்ச் 16ம் தேதி அன்று 101 வயதில் அடி எடுத்து வைக்கிறார். இந்த பிறந்தநாளை ஆயிரக்கணக்கானோருக்கு அறுசுவை கறி விருந்து அளித்து விமரிசையாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.

நாட்டின் சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி போராடியதாக கூறும் சுதந்திர போராட்ட தியாகி வி.கே.செல்லம், இந்த தலைமுறையினர் போதை பழக்கத்தோடு போராடி வருவது வருத்தம் அளிப்பதாக கூறுகின்றார்.

போதைப்பழக்கத்தை கைவிட்டு இயற்கை உணவை உண்பதிலும்,விளையாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுதந்திர போராட்ட தியாகி வி.கே.செல்லம் இளைஞர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

varient
Night
Day