எழுத்தின் அளவு: அ+ அ- அ
காலிப் பணியிடங்களை தேர்வெழுதிய ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஆனால், கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் அவர்களை அலைக்கழிக்கும் விளம்பர திமுக அரசின் செயல் குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.
2024 பிப்ரவரி 4-ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்டன. 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில் 37 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். ஜூன் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
இதனிடையே 7 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறிய நிலையில், 2 ஆயிரத்து 800 காலி பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க காலிப் பணியிடங்களை அதிகரிக்க கோரி முதலமைச்சரிடம் மனு கொடுக்க அவரது இல்லத்திற்குச் சென்ற BT/BRTE தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் போலீசாரால் தடுக்கப்பட்டு தேனாம்பேட்டை முத்தையா தெரு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது.
ஆட்சிக்கு வந்தால் காலிப் பணியிடங்களை நிரப்பி அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வழங்குவோம் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் பட்டதாரி ஆசிரியர்களை அலட்சியம் செய்து விட்டது. பல வருடங்களாக ஆசிரியராக வேண்டும் என கனவு கண்டு, பல்வேறு தேர்வுகளை எழுதி காத்திருக்கும் தங்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என பட்டதாரி ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
இந்நிலையில் ஆயிரத்து 200 காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக கடந்த மார்ச் 24-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2026 ஜனவரிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாகவும் அரசு செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் எவ்வளவு தேர்வுதான் எழுத வேண்டும்? எழுதினாலும் பயன் என்ன? என மனம் நொந்து போயுள்ளனர் பட்டதாரி ஆசிரியர்கள். விளம்பர திமுக ஆட்சியை பொறுத்தவரை அரசு வேலை என்பது குதிரைக் கொம்பாக மாறி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.....