எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மூ காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு. இந்த நடவடிக்கையை போராகவே கருதுவதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவுடன் போரை முன்னெடுக்குமா? பார்க்கலாம் விரிவாக..!
பாகிஸ்தான் ஏற்கனவே 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கான பணத்தை வெளியில் கடனாக வாங்கி வைத்திருக்கிறது. அந்த நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு வெறும் 8 பில்லியன் டாலராகவே உள்ளது. இந்த 8 பில்லியன் டாலர்களை வைத்துக்கொண்டு அடுத்த ஒன்றரை மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே பாகிஸ்தானால் செலவிட முடியும் என்ற நிலையில் இந்தியாவுடனான போரை பாகிஸ்தான் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 308-ஆக உள்ள நிலையில் அது 400 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்ந்து சாமானிய மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகக்கூடிய சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி தொடர்பான உலகளாவிய கண்காணிப்புக் குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்த பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க யாரும் முன்வராத நிலையில், கடும் பிரயத்தனங்களை பாகிஸ்தான் செய்ததன் விளைவாக கடந்த 2022ம் ஆண்டு அப்படியலில் இருந்து நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போரில் ஈடுபட மாட்டோம், அமைதியை நிலைநாட்டுவோம் என உறுதியளித்த பின்னரே, சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டது. இந்தநிலையில் இந்தியாவுடன் போரை முன்னெடுத்தால் அது பாகிஸ்தானுக்கு தன் தலையில் தானே மண்னை வாரிப் போட்டுக்கொள்வதாகத்தான் இருக்கும். ஐஎம்எஃப் வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதி உதவி நிறுத்தப்படுவதோடு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வரும் நிதி உதவியும் நிறுத்தப்படும் நிலை ஏற்படும்.
இதனால் பாகிஸ்தானில் எரிபொருள், அரிசி, துணிமணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதி குறைவதோடு, ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயரக்கூடும் என்றும் இது பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கே பெரிய பிரச்சினையாக வந்து முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். பாகிஸ்தானில் பங்குச்சந்தையும் கடுமையான சரிவை சந்திக்கும் என்றும் அரசே திவாலாகும் எனவும் கூறுகின்றனர்.
இதனாலேயே இந்தியாவுடன் போர் என்னும் முடிவை பாகிஸ்தான் எடுத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றே சொல்லப்படுகிறது. எல்லையில் படைகளை குவித்தாலும், மறுபக்கம் பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருப்பதும் அதனைத்தான் உறுதிப்படுத்தியுள்ளது.