எழுத்தின் அளவு: அ+ அ- அ
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம், ஆயிரமாவது நாளை கடந்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பரந்தூர் விமான நிலைய திட்டமும், மக்களின் போராட்டம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரத்தை மையப்படுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 1000-வது நாளை எட்டியுள்ளது.
இதுவரை கிராம மக்கள் மொட்டை அடிக்கும் போராட்டம், கருப்பு கொடி போராட்டம், நீர்நிலைகளில் இறங்கி போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், சட்டமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம், கண்களை கட்டி போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் கலந்துக் கொண்டு, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், 1000வது நாள் போராட்டத்தை ஒட்டி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மக்களிடையே பேசிய அவர், இந்த திட்டத்தை அரசு கொண்டுவர முடியாது என்றும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபடுவதால் உங்களை அரசால் நெருங்க முடியவில்லை என கூறினார். மக்களின் போராட்டம் வெற்றியடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்கள் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக போராட வில்லை என்றும் சென்னையை காப்பாற்றவே போராட்டம் நடத்துவதாகவும் சுந்தர்ராஜன் தெரிவித்தார். பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் போன்று பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களின் வளர்ச்சி தடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த விமான நிலையம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் அனுமதி, என எந்த ஒரு அனுமதியும் வழங்காததால் நீதிமன்றத்தை நாட முடியவில்லை என்றும் அப்படி அனுமதி வழங்கினால் நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீர் நிலைகள், விவசாய நிலங்களை அழித்து அதற்கு மேல் வரக்கூடிய பரந்தூர் விமான நிலையம் தங்களுக்கு தேவையில்லை என்றும், மாற்று இடத்தை மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பொதுமக்கள், அதுவரையில் தங்களின் போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.