பழிவாங்க கல்லூரி சிஇஓ மீது பாலியல் புகார்... நிர்வாகம் வெளியிட்ட ஆதாரத்தால் திடீர் திருப்பம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே தனியார் கல்லூரி நிர்வாகி மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், திடீர் திருப்பமாக கல்லூரியில் ஏசி பழுது பார்க்கும் வேலை செய்து வந்த தன் கணவரிடம் இருந்து ஒப்பந்தம் கைமாறியதால், அவர் பொய் புகார் அளித்ததாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை மாவட்டம் பெட்டதாபுரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் சிஇஓ பிரசன்னா என்பவர் மீது, அதே கல்லூரியில் அலுவலக ஊழியராக பணிபுரியும் பெண் ஒருவர் பெரியநாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசன்னாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து அந்த கல்லூரி நிர்வாகத்தின் மனித வள மேம்பாட்டு மேலாளர் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிஇஓ மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் ஸ்ரீதர், அதே கல்லூரியில் ஏ.சி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கல்லூரி ஏ.சி முழுவதும் இவர் பராமரிப்பு செய்து வந்த நிலையில் கடந்த மாதம் பணிக்கு அவரை அழைத்தும் வராததால் வேறு ஒருவருக்கு அந்த பணியை கல்லூரி நிர்வாகம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீதர், தனது மனைவியுடன் கடந்த மார்ச் 21 ஆம்தேதி பிரசன்னா வீட்டிற்கு சென்று கார், பைக் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதுகுறித்து பிரசன்னா புகாரளித்த நிலையில், விசாரணையின் போது போலீசாரிடம் ஸ்ரீதர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பிரச்னை சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனை மனதில் வைத்து கொண்டு கடந்த 12 ஆம் தேதி ஸ்ரீதர் மனைவி கல்லூரி சிஇஓ பிரசன்னா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளதாக மனோகரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் சம்பவம் நடந்ததாக கூறிய தேதியில், புகாரளித்த பெண் எப்போதும் போல் கல்லூரியில் இருந்து வெளியேறும் காட்சிகளையும் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஏ.சி. சர்வீஸ் ஒப்பந்தம் கை மாறியதால் கல்லூரி சிஇஓ வீட்டில் நுழைந்து காரை உடைத்த சம்பவத்தை திசை திருப்பவே, பொய்யாக பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பெண்களுக்கான அரசு இயற்றியுள்ள பல்வேறு சட்டங்கள் அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே தவிர, பொய் புகார் அளிப்பதற்கு அல்ல என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Night
Day