எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைப் பேறு பிரிவில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் வகையில் சுவற்றில் துப்பரவு பணியாளர்கள் அலட்சியமாக ஒட்டடை அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள இந்த சம்பவம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளும் 1,800 உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகளும் அழைத்து வரப்படுகிறன்றனர். இந்நிலையில் மகப்பேறு பிரிவில், பிறந்த குழந்தைகளுடன் தாய்மார்கள் இருக்கும்போது, அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல், அங்கிருந்த பெண் தூய்மைப் பணியாளர், சுவற்றில் உள்ள தூசிகளை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்
அப்போது அங்கு இருந்தவர்கள் குழந்தைகள் இருப்பதாகவும், இந்த தூசி குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் கூறியுள்ளனர். ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல் பெண் தூய்மை பணியாளர் தனது பணியிலேயே கண்ணாக இருந்துள்ளார். மேலும் எப்போதுமே இப்படிதான் செய்வோம் என அலட்சியமாகவும் பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பேச்சித்தாய் என்பவருக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பிரசவம் நடந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்ததால் தாயும் சேயும் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கு தூய்மைப் பணியாளர்களின் செயலால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வார்டுகளில் இது போன்று தூய்மைப் பணி மேற்கொண்டு இருக்கக் கூடாது எனக் கூறும் சமூக ஆர்வலர்கள், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் விசாரணை நடத்தி தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.