எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்து கொண்டு சொந்த தொகுதி மக்களே கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசின் நிர்வாகத்தையும், அலட்சியப் போக்கையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விளம்பர அரசு ஆட்சிக்கு வந்த நாட்களில் இருந்தே சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாய் தான் செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு பணத்தை கொள்ளையடிப்பதிலேயே கண்ணாய் இருந்து வருகிறது. சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து தன் வயிற்றை நிரப்பிக்கொள்ளும், திமுக அமைச்சர்களின் அலட்சியப்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த தொகுதியில் அடிப்படை வசதிகூட செய்து கொடுக்காமல், மக்களை தினம் தினம் இன்னலுக்குள்ளாக்கும் ஒரு நிலைதான் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
அமைச்சர் கே.என் நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சிஅம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி அந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்றரை வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியயோர் என மொத்தம் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறையூர் பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் பிரட், ப்ரோட்டா உள்ளிட்டவைகளை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு உடனே நின்றுவிடும் என அலட்சியமாக பதிலளித்ததுடன், மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கேட்டும், உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், திமுகவின் ஆட்சி எப்படி புரையோடிப்போய் இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி...