புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையம்... திறப்பு விழா காண்பது எப்போது!

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே, ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறப்பு விழாவிற்கான தேதி தராததால், ஊராட்சி நூலக கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வரும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கதிரம்பட்டி கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இங்கு மாடப் பள்ளி, சௌடேகுப்பம், சீரங்கப்பட்டி, அகரம், பொம்மிக்குப்பம், தாதனவலசை, செலந்தம்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மருத்துவ சேவை பெற்று வந்தனர். 

இந்த சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்ததால் அதை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 2023-2004 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து சமுதாய சுகாதார கட்டிடத்தை 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தொடங்கின. இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம், அருகாமையில் உள்ள ஊராட்சி நூலக கட்டிடத்திற்கு  தற்காலிகமாக மாற்றப்பட்டது.

ஆனால், அங்கு போதுமான இட வசதி இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியதுடன், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் சுகாதார நிலைய பழைய கட்டிட புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. திறப்பு விழாவிற்கு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தேதி தராததே இதற்கு காரணம் என கூறப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பல லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை  பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஆட்சியர், மருத்துவ இணை இயக்குநர், ஊராட்சி ஒன்றியம் என அனைத்து இடங்களிலும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள்  வேதனை தெரிவிக்கின்றனர். அவர்களின் சிரமத்தை உணர்ந்து புனரமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day