பூட்டைத் திறந்தால் மணி அடிக்கும்... திருடர்களுக்கு சவால்விடும் அசத்தல் படைப்பு...

எழுத்தின் அளவு: அ+ அ-

தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு தான் நவீன முறையில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தினாலும் அதனையும் விட புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களும் திருடர்களும் தங்கள் தொழிலை மெருகேற்றி சவால் விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் மின்சார உதவியின்றி ஒலி எழுப்பும் வகையிலான  பூட்டு ஒன்றை தயாரித்து வருகிறார் திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளி. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

திண்டுக்கல் என்ற பெயரைக் கேட்டதும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் நினைவுக்கு வருவது பூட்டுகள் தான். திண்டுக்கல் மாநகரத்தில் உருவாகும் பூட்டுகள் அதன் தனித்துவமான வடிவமைப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் கலாசார முக்கியத்துவத்திற்காக பிரபலமாக விளங்கி வருகின்றன. 

திண்டுக்கல் பூட்டுகள் 400 ஆண்டுகள் பழைமையும் பாரம்பரியமும் வாய்ந்தவை. என்னதான் உலகம் கணினி மயமாக மாறினாலும் தற்போதும் திறமையான கைவினை கலைஞர்களால் பூட்டு தயாரிப்புக் கலை மென்மேலும் காலத்திற்கேற்ப வளர்க்கப்பட்டு வருகிறது.  

தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள பல முக்கியமான கோயில்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் பூட்டுகள் திண்டுக்கல்லில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் ஆள் உயர பூட்டு, பழனி மலைக்கோயில் பூட்டு, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள பூட்டுகள் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்டவை என்பது திண்டுக்கல்லும் பெருமை சேர்க்கும் தகவலாகும். 

இதுமட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் திண்டுக்கல் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் பெருமையை பறைசாற்றி வருகின்றன.

இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட திண்டுக்கல் பூட்டின் தனித்துவத்தை அங்கீகரித்து புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் அலிகார் பூட்டுகள் மற்றும் சைனா பூட்டுக்கள் பிரபலமாகத் தொடங்கிய பின்பு திண்டுக்கல் பூட்டுகளின் தேவை சற்றே குறையத் தொடங்கியது. ஆனாலும் இன்று வரை திண்டுக்கல் பூட்டுகளுக்கு உள்ள முக்கியத்துவம் சற்றும் குறையவே இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த திண்டுக்கல்லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மின்சாரம் இல்லாமல் ஒலி எழுப்பக் கூடிய பூட்டைத் தயாரித்துள்ளார் பூட்டுத் தொழிலாளி முருகேசன்.  

காரைக்குடி அருகே உள்ள சூரக்குடி சிவன் கோயிலுக்காக 30 கிலோ எடையில் ஒன்றரை அடி  உயரத்தில் 1 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூட்டுக்கு ஒன்றரை அடி உயரத்தில் சாவியை உருவாக்கியுள்ளார். இந்த பூட்டை திறக்க முயற்சித்தால் மின்சார வசதியில்லாமலேயே ஒலி எழுப்பக் கூடிய மணியை வைத்து இந்த பூட்டை தயாரித்துள்ளார் பூட்டுத் தொழிலாளி முருகேசன்.

என்ன தான் திண்டுக்கல் பூட்டு என்று பெருமை பேசினாலும் புவிசார் குறியீட்டை வழங்கினாலும் அந்த குறியீட்டை வைத்துக் கொண்டு  உலக சந்தையில் தொழில் செய்ய முடியாது என்று பூட்டு தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர். எனவே படித்த இளைஞர்கள் சுய தொழில் செய்யும் வகையில் இந்த பூட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில்பேட்டை அமைத்தால் ஆண்டிற்கு 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் இதன்மூலம் தயாரிக்கப்படும் பூட்டுகளை தமிழக அரசு சார்பிலேயே உலக சந்தைக்கு எடுத்துச் சென்றால் திண்டுக்கல் பூட்டு அழியா வண்ணம் காப்பாற்றப்படும் என்றும்  பூட்டு தொழிலாளி முருகேசன் தெரிவித்துள்ளார்.  

இத்தகையை சிறப்பு வாய்ந்த திண்டுக்கல் பூட்டுக்களை உலகளவில் சந்தைப்படுத்த வேண்டும் என்பதும் பூட்டுத் தொழிலாளர்களின் திறமைகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பூட்டுத் தொழிலாளர்கள் மட்டுமன்றி தமிழர்களாகிய நம் அனைவரின் வேண்டுகோளாகவும் உள்ளது. வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Night
Day