எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்ததால்தான் 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சியை இழந்தது எனவும் தமிழ்நாட்டில் மதுவிலக்கிற்கு வாய்ப்பே இல்லை எனவும் அமைச்சர் ரகுபதி வெளிப்படையாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கா? ஒரு முறை அறிவித்ததால்தான் 2016ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தோம் என செய்தியாளர் சந்திப்பில் ஓபனாக பேசியுள்ளார் அமைச்சர் ரகுபதி....
தமிழ்நாட்டில் விளம்பர திமுக அரசால் வீதிக்கு, வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளதால் இன்று பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டன. போதைப் பொருள் புழக்கம், ரவுடிகள் அராஜகம், கொலை, கொள்ளை ஆகியவற்றால் மக்கள் நிம்மதியை தொலைத்து நிற்கின்றனர். அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு அன்றன்று கிடைக்கும் வருமானத்தை, வழிப்பறி செய்வது போல் டாஸ்மாக் கடைகள் மூலம் தட்டிப் பறிக்கிறது விளம்பர திமுக அரசு.
குடும்பங்கள் எப்படிப் போனால் என்ன, பள்ளி படிக்கும் வயதிலேய மாணவர்கள் சீரழிந்தால் என்ன என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளை திறந்து மதுவை தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்துள்ளது இந்த அரசு. டாஸ்மாக் ஒருபுறம் என்றால், கள்ளச்சாராயம் மறுபுறம். கள்ளக்குறிச்சியில் 67 பேரை காவு வாங்கியும், இந்த அரசு திருந்தியதாக தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளையும் மூடாமல் கள்ளச்சாராயத்தையும் ஒழிக்காமல், வருமானத்தை மட்டுமே மனதில் வைத்து நடப்பதை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது விளம்பர திமுக அரசு.
பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்ட மதுவை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கு புதுப்புது அர்த்தங்களை கூறி, தனது வாய்ஜாலத்தை நிரூபிக்க பார்த்திருக்கிறார் அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மதுவிலக்கு குறித்து ஏதேதோ பேசி சமாளிக்க பார்த்துள்ளார்.
தமிழக அரசின் கொள்கை முடிவு என்பது பூரண மதுவிலக்கு தான், இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் இது சாத்தியம் கிடையாது என்று ஒரே போடாய் போட்டார் அமைச்சர் ரகுபதி. பழியை மத்திய அரசு மேல் போட்ட அவர், மத்திய அரசு இந்தியா முழுவதும் இதனை அமல்படுத்த வேண்டும், அப்போதுதான் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் என்று தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் கொடுத்தார் ஒரு சூப்பர் விளக்கம்.
விழாக் காலங்களில் டார்கெட் வைத்து விளம்பர திமுக அரசு மதுவிற்பனை செய்துவரும் நிலையில், மது விற்பனையில் இருந்து வரும் வருமானம் தமிழகத்திற்கு தேவையில்லை, அதை நம்பி தமிழக அரசு இல்லை என்று, சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பதுபோல் புது குண்டை தூக்கிப் போட்டார் அமைச்சர் ரகுபதி. இதை எல்லாம் விட, அமைச்சர் ரகுபதி அடுத்து கூறியதுதான் பேட்டியின் ஹைலைட், நாங்கள் பூரண மதுவிலக்கை கொண்டு வந்துருவோம், ஆனால் அப்படி அதை அமல்படுத்தினால் அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச் சாராயம் வந்துவிடும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்து விடும் என்று கூறி அசர வைத்தார் அமைச்சர்.
இதற்கெல்லாம் இன்னும் ஒருபடி மேலே போய், அடுத்து ஒரு டேட்டாவை அள்ளி வீசி, அந்த கட்சியினரையே அப்படியா என்று கேட்க வைத்தார் அமைச்சர் ரகுபதி. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று 2016ல் கூறியதால்தான், 15 தொகுதிகளை இழக்க வேண்டியதாகி விட்டது, ஆட்சியையே இழக்கும் நிலை திமுகவுக்கு ஏற்பட்டது என்று அதிரடியாக கூறி மிரள வைத்தார் அமைச்சர் ரகுபதி.
தமிழக பெண்களை இளம் விதவைகளாக்கும் மதுபான விற்பனையை தூக்கி எறிவதை விட்டு விட்டு, அதற்கு சப்பைக் கட்டு கட்டி நியாயப்படுத்தப் பார்த்த அமைச்சரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமைச்சரின் பேட்டியை பார்க்கையில், இது மக்களுக்கான அரசு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக கருத்து கூறியுள்ளனர் சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசுக்கு 2026ல் மக்கள் பாடம்புகட்டுவது உறுதி என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.