எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெரம்பலூர் அருகே காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீசாரிடம், மது போதையில் இருந்த வழக்கறிஞர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலரின் இதுபோன்ற செயல், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போதை வழக்கறிஞர்களின் அட்ராசிட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
பெரம்பலூர் அருகே ஆயக்குடி கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த, மங்களமேடு காவல் நிலையத்திற்கு, பெரம்பலூரை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் இளங்கோவன் என்ற வழக்கறிஞர்கள், அவர்களது வாதியுடன் வந்தனர்.
3 பேரும், அங்கு பணியில் இருந்த பெண் எஸ் ஐ உடன் பேசத் தொடங்கினர். அப்போது அவர்கள் அளவிற்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மதுவின் நெடி காவல்நிலையம் முழுவதும் வீசியது, பிற வழக்குகளுக்காக புகார் அளிக்க வந்திருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீசார், மதுவின் நெடி தாங்க முடியவில்லை என்றும், உங்கள் வாதியின் மனுவை விசாரிக்கும் போலீசார் லப்பைக்குடிக்காட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பதாகவும், அவர்கள் வந்த உடன், விசாரிப்போம் என தெரிவித்தார்.
ஆனால் உச்ச போதையில் இருந்த வழக்கறிஞர்களில் ஒருவர் “ஸ்டேசன் உங்க வீடா”, “உங்க அப்பன் வீட்டு சொத்தா”, என தரக்குறைவாகவும், அநாகரீகமான வார்த்தைகளால் கடுமையாக வசைபாடினார். இதனால் செய்வதறியாது திகைத்த பெண் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தியும், கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.
மற்றறொரு போதை வழக்கறிஞரும், அவருடன் வந்திருந்த வாதியும், போலீசாரை வசைபாடியதுடன், உங்கள் எல்லையில் உள்ள தென்றல் கடையில்தான் கள்ளச்சாரயம் வாங்கி குடித்தோம், உங்களால் என்ன பண்ண முடியும்? நீங்கள் மாமூல் வாங்கி கொண்டு கள்ளச்சாராயம் விற்க சொல்கிறீர்கள், அதனால்தான் வாங்கி குடிக்கிறோம் என எகிறனர்.
“என்ன செய்து வீடுவீர்கள்”, “போதையில் தான் இருக்கிறோம், முடிந்தால் கேஸ் போடு பார்க்கலாம்”, வழக்கறிஞர்கள் சங்கம் தங்களுக்கு துணை நிற்கும் என அடுத்தடுத்து அறைகூவல் விடுத்தனர். அங்கிருப்போர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், வழக்கறிஞர்களும், வாதியும், சகட்டு மேனிக்கு காவலர்களை வசைபாடியது பொதுமக்களை அதிருப்தியடைய செய்தது.
அருவருப்பான வார்த்தைகளை கேட்ட பொதுமக்கள், இப்படிப்பட்டவர்களும் வழக்கறிஞர்களா என நொந்து கொண்டனர். ஒரு சில போதை வழக்கறிஞர்கள் செய்யும் ரகளைகளினால், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களால், சுமார் ஒன்றரை மணி நேரம் மங்களமேடு காவல் நிலையம் கலவர பூமியாக காட்சியளித்தது. இதுபோன்ற போதை வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் துணை போகாமல், உரிய ஆலோசனைகள் வழங்கி வழக்கறிஞர் தொழிலின் மேன்மையையும் மாண்பையும் காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.