பெண் மருத்துவரிடம் ரூ.10 கோடி மோசடி... மின்வாரிய ஆய்வாளர் கைது...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை பெண் மருத்துவரிடம் சுமார் 10 கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்து ஏமாற்றிய திருவான்மியூர் மின்வாரிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிக்கியது எப்படி?, மேலும் 9 பேர் கைதாவார்களா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை சேப்பாக்கம் சைடோஜி தெருவில் வசித்து வருபவர் மருத்துவர் கௌரி. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை அடையாறு கஸ்தூரி பாய் நகர், 2-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

திருவான்மியூர் மின்வாரியத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சங்கர், என்ன உதவி வேண்டும் என்றாலும் தன்னிடம் கேட்கலாம் என மருத்துவர் கௌரியிடம் கூறியுள்ளார். இதனால் சங்கர் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி மீது நம்பிக்கை வைத்த கௌரி, ஈசிஆர் பகுதியில் மீனவர்களுக்காக இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது தனது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட சங்கர் குடும்பம் மற்றும் அவரது உறவினர்கள் தனியாக இருக்கும் பெண் மருத்துவரை எளிதாக ஏமாற்றி விடலாம் என்ற நோக்கத்தில் நய வஞ்சக நாடகத்தை தொடங்கியுள்ளனர். மருத்துவமனைக்காக இடம் வாங்கி விட்டோம், கட்டடம் கட்ட செங்கல், ஜல்லி இறங்கி விட்டது என அள்ளி விட்டு அவ்வப்போது நகை, பணம் என சுமார் பத்து கோடி வரை வாங்கியதாகத் தெரிகிறது. அத்துடன் இன்னும் பணம் தேவை என்றும் கூறியுள்ளனர்.

பின்னர் இவர்கள் மீது சந்தேகம் அடைந்த மருத்துவர் கௌரி, அவர்கள் வாங்கிக் கொடுத்த ஆவணங்களை சோதனை செய்தபோது அது போலி என்பதும் அந்த இடம் சங்கரின் மனைவி புவனேஸ்வரி பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சங்கர், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களின் உறவினர்களான வெற்றிவேல், பாலசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் மோசடியை உறுதி செய்த போலீசார், பணம் தருவதாக கூறி கௌரி மூலமி சங்கரை வரவைத்து கைது செய்தனர். உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்துள்ள நிலையில் சங்கரின் மனைவி உள்பட எஞ்சிய 9 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

varient
Night
Day